
அறிமுக இயக்குநர் பவன் ராஜகோபாலன் இயக்கியுள்ள படம் ‘விவேசினி’. இவர் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் நாசர், காவ்யா உட்பட பலர் நடித்துள்ளனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ரிஷப் நாகேந்திரா இசை அமைத்துள்ளார். டிச.1ம் தேதி வெளியாக இருக்கும் படம் பற்றி பவன் ராஜகோபாலன் கூறியதாவது:
இந்தப் படம் பகுத்தறிவைப் பேசுகிறது. பேய்கள் உலவுவதாகக் கூறப்படும் காட்டுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்று தடை விதிக்கிறார்கள். உண்மையிலேயே அது பேய் தானா? அங்கு என்ன இருக்கிறது என்ற உண்மையைக் கண்டறிய நினைக்கிறார், பகுத்தறிவு செயற்பாட்டாளர் ஜெயராமனின் மகள் சக்தி. அவருடன் லண்டனைச் சேர்ந்த அலிஸ் வாக்கர், நியூயார்க்கைச் சேர்ந்த சார்லஸ் ஆகியோரும் இணைகிறார்கள். அந்த தேடலில் சக்திக்குத் திடுக்கிட வைக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் கிடைக்கின்றன. அது என்ன, அங்கு என்ன உண்மையைக் கண்டுபிடித்தார்கள் என்பது படம். விவேசினி என்ற வார்த்தை புரியுமா? என்று கேட்கிறார்கள். பிராகிருத மொழிச் சொல் அது. விவேசினி என்றால், எதையும் ஆராய்ந்து பொருள் தேட விரும்பும் பெண். அந்த வார்த்தை பிரபலமாக வேண்டும் என்றுதான் வைத்திருக்கிறோம். படத்தை நானே சொந்தமாக டிச. 1-ம் தேதி வெளியிடுகிறேன். ரசிகர்களுக்கு இந்தப் படம் புது அனுபவத்தைக் கொடுக்கும்.