மதுரை: மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று (ஆக.28) நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: மேயர் இந்திராணி: “பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சியில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்காக கவுன்சிலர்களும், மாநகராட்சி நிர்வாகமும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார். 1-வது மண்டல தலைவர் வாசுகி: “மழைநீர் கால்வாய்களை தூர்வார கடந்த கூட்டத்தில் கோரிக்கை வைத்தேன். தற்போது தூர்வாரும் பணிகள் நடப்பதற்கு ஆணையாளருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
குறைதீர் கூட்டத்தில் நான் கொடுத்த ஆக்கிரமிப்பு தொடர்பான மனுவுக்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து, ‘இது பொதுப்பணித்துறை சாலை, நெடுஞ்சாலைத்துறை சாலை’ என்று பொறுப்பில்லாமல் பதில் தருகிறார்கள். எந்த சாலை என்றாலும் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியே அகற்றலாம். ஆனால், எனக்கே இப்படி தவறான பதிலை தருகிறார்கள், என்றால் பொதுமக்கள் நிலையை நினைத்துப் பாருங்கள்” என்றார்.
2வது மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி: “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுப்பதில்லை என்பதுபோல், மாநகராட்சியில் மேயர், ஆணையாளர் செய்து கொடுக்க சொல்லி உத்தரவிட்ட பணிகளை கூட, கீழ்நிலை அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை. மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 3 ஷிப்டுக்கு பதிலாக 2 ஷிப்ட் தூய்மைப் பணியாளர்கள் தான் பணிபுரிகிறார்கள். இரவில் பஸ்நிலையமே துர்நாற்றம் வீசுகிறது. விஐபி-க்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடமாக என்னுடைய மண்டலம் உள்ளது. விஐபி-க்கள் வரும்போதெல்லாம் எங்கள் மண்டல தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சிறப்பு தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்” என்றார்.
5-வது மண்டலத் தலைவர் சுவிதா: “மக்கள் நடமாட முடியாத அளவிற்கு தெருவுக்கு 20 நாய்கள் திரிகிறது” என்றார். அதற்கு மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத், “நாய்கள் தற்போது அதிகளவு பிடிக்கப்படுகிறது” என்றார். சுவிதா: “உங்கள் பதிலில் திருப்தியில்லை. மக்கள் திருப்தி அடையும் வகையில் வேலை செய்யுங்கள்” என்றார்.
எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா: “பில் கலெக்டர்கள் பணியிடங்களில் தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், சாலை, பாதாள சாக்கடை பராமரிப்பாளர்கள் போன்ற தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இதுபோன்ற பணியாளர்களை நியமிப்பதால்தானே, சொத்து வரி குறைப்பு போன்ற முறைகேடுகள் நடக்கிறது. பில் கலெக்டர்கள் மட்டுமில்லாது, இந்த முறைகேட்டில் தொடர்புடைய எவரையும் எத்தகைய அழுத்தம் வந்தாலும் விடக்கூடாது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஆணையாளர் தினேஷ்குமார்: “உதவி ஆணையாளர் தலைமையிலான கமிட்டி, விசாரணையை முடித்துள்ளனர். இந்த முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் பற்றாக்குறையால்தான் தேர்ச்சி திறனற்ற பணியாளர்களை பில் கலெக்டர்களாக நியமிக்கும் இந்த நடைமுறை, நான் வருவதற்கு முன்பே காலம் காலமாக கடைபிடிக்கப்படுகிறது” என்றார்.
சோலைராஜா: “பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் எப்போது முடியும்? ஓராண்டாக சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள்” என்றார். தலைமைப் பொறியாளர் ரூபன்: “செப்டம்பர் 25-ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். பரிசோதனை மற்றும் குழாய்களை சுத்தம் செய்து டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மக்களுக்கு பெரியாறு குடிநீர் விநியோகிக்கப்படும்” என்றார். .
கவுன்சிலர் குமரவேல்: “மாநகராட்சி அஜண்டாக்களை ஃபைலில் வைத்துக் கொடுப்பதில்லை. கடந்த காலத்தில் ஃபைலில் வைத்து கொடுப்பது வழக்கம். ஏனென்றால் அஜண்டாக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான மாநகராட்சி ஆவணம். மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். மாநகராட்சி சாலைகளில் பரவலாக பாதாள சாக்கடை நிரம்பி ஓடி துர்நாற்றம் வீசுகிறது” என்றார். இப்படியாக விவாதம் நடைபெற்றது.
மதுரை மாநகர திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திமுக மாவட்டச் செயலாளர் தளபதி ஏற்பாட்டில் திருநகரில் நடந்தது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தல் வெற்றிக்காக பணியாற்றிய திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்டோருக்கு தளபதி பிரம்மாண்ட அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பங்கேற்பதற்காக, பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி கூட்டத்திற்கு வரவில்லை.
வந்திருந்த மண்டல தலைவர்களும், திமுக கவுன்சிலர்களும் சிறிது நேரம் கடமைக்கு இருந்துவிட்டு விருந்தில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றதால் மாமன்றத்தில் இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மாநகராட்சி மேயர், வேறு வழியில்லாமல் கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் 11.45 மணிக்கே முடித்துவிட்டு அவரும் புறப்பட்டுச் சென்றார். திமுக மாவட்டச் செயலாளர் தளபதிக்கும் மேயர் இந்திராணிக்கும் நடக்கும் ஈகோ யுத்தத்தால் மாமன்றக் கூட்டத்திற்கு பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள் வராமல் போனதும், அதனால் மேயர் கூட்டத்தை விரைவாக முடித்ததும் மதுரை திமுக உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.