விருதுநகர்: விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், வரத்துக் கால்வாய்கள், ஓடைகள், காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வடமலைக் குறிச்சி கண்மாய் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் காட்டாற்று ஓடையில் பெருக்கெடுத்தது.
இதனால், விருதுநகர் போலீஸ் பாலம் பகுதியை மழை நீர் சூழ்ந்தது. தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. அய்யனார் நகர், கலைஞர் நகர், அகமது நகர், பர்மா காலனி போன்ற பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் சூழ்ந்தது.
இதே போன்று சிவஞானபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி, ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் சிரமம் அடைந்தனர்.