மாஸ்கோ: விமான விபத்தில் ரஷ்யாவின் வாக்னர் குழு தலைவர் உட்பட 9 பேர் மரணமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுளளது. சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது இந்த வாக்னர் குழு.
ட்வெர் பிராந்தியத்தில் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் அடக்கம். ரஷ்ய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் என்ன? – வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.
ஆனால், உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மறைமுகமாக அதிபர் புதினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது.
வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புதினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜின் ப்ரிகோஸின் என்ற புதினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014-ல் இந்தப் படையை உருவாக்கினர். இதில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. ஏன் தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட ‘தி வாக்னர்’ குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. ஒரு மூர்க்கத்தனமான ஆயுதக் குழு. பக்முத்தில் வாக்னர் குழுவை இறக்கி தங்கள் படைகளுக்கு பெரும் சேதத்தை ரஷ்யா ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி இருந்தது.
இவ்வாறாக இவர்களின் படைகள் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் போர் தொடங்குவதற்கு முன்னரே 2014 தொட்டு உக்ரைனில் அவ்வப்போது சிறு தாக்குதல்களை இவர்கள் நடத்தினர். குறிப்பாக, கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் போரில் ‘தி வாக்னர்’ ஆயுதக் குழு பெரும் பங்காற்றியது.
2015-ல் தொடங்கி இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.