சென்னை: விதார்த், கலையரசன், த்ரிகண், தேஜு அஸ்வினி, சந்தோஷ் பிரதாப், ஸ்வேதா டோரதி, அதுல்யா சந்திரா உட்பட பலர் நடிக்கும் படத்துக்கு ‘மூன்றாம் கண்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். டிரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் வொயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் கே.சசிகுமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அஜீஸ் இசை அமைக்கிறார். ராஜ் பிரதாப் பின்னணி இசை அமைக்கிறார்.
ஹைபர்லிங்க் கிரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படம் பற்றி இயக்குநர் சகோ கணேசன் கூறும்போது, “ நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் திடீரென கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது நான்தான் என்று 4 பேர் சொல்கிறார்கள். அதில் ஒருவர்தான் உண்மையான குற்றவாளி. அவர் யார் என்பதைக் கண்டு பிடிப்பதுதான் கதை. இதில் காதல் காட்சிகள் இருக்காது. சந்தோஷ் பிரதாப் கற்பனை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் திரைக்கதையில் நிறைய புதிய விஷயங்கள் இருக்கும். நிஜமான பேக்டரியில் கொலை காட்சியைப் படமாக்கியபோது அங்கு பணியாற்றியவர்கள் நிஜம் என நினைத்துப் பயந்துவிட்டார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் 7 நாள் மட்டுமே பாக்கி இருக்கிறது” என்றார்.