
விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் கன்னட போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு ’லியோ’ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான படத்தின் ‘நாரெடி தான் வரவா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் கன்னட போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நேற்று தெலுங்கு போஸ்டர் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.