‘கோட்’ படத்தை 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக உருவாக்கியதன் பின்னணி என்ன என்று வெங்கட்பிரபு காரணம் பகிர்ந்துள்ளர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி செளத்ரி, யோகிபாபு, மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் ‘கோட்’ படத்தின் தணிக்கைச் சான்றிதழ் இணையத்தில் வெளியானது. அதன்மூலம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக ‘கோட்’ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து இணையவாசிகள் பலரும் 3 மணி நேர படமா என்று பேசத் தொடங்கினார்கள்.
ஏன் ‘கோட்’ 3 மணி நேர படமாக உருவாக்கினோம் என்று இயக்குநர் வெங்கட்பிரபு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர், “3 மணி நேரம் என்ற பயம் இருந்தது உண்மை தான். சில படங்களின் கதையை முழுமையாக சொன்னால் மட்டுமே திருப்திகரமாக இருக்கும். கண்டிப்பாக சுவாரஸ்யமாக இருக்கும். வேகமான திரைக்கதை அமைப்பினால் 3 மணி நேரம் என்பது தெரியவில்லை.
படத்தைப் பார்த்த விஜய், தயாரிப்பாளர்கள், எனது டீம் என யாருக்குமே அது குறையாக தெரியவில்லை. சில காட்சிகள் தொய்வாக இருக்கிறது என நினைக்கும்போது உடனே பரபரப்பாக அடுத்த காட்சி இருக்கும். மக்களுக்கு பயங்கர ட்ரீட்டாக இருக்கும்.
அடுத்த முறை எப்போது விஜய்யை திரையில் பார்ப்போம் என்ற சூழலில், இந்தப் படம் விஜய்யை கொண்டாடுவது போல இருக்கும். அதனால்தான் ட்ரெய்லரில் ‘அண்ணன் வரார் வழிவிடு’ என்றெல்லாம் போட்டிருப்போம்” என்று வெங்கட்பிரபு விவரித்துள்ளார்.