State

விக்கிரவாண்டி தவெக மாநாடு: 21 கேள்விகளுக்கு பதில் கேட்டு புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை கடிதம் | Police letter to Bussi Anand regarding Vikravandi conference

விக்கிரவாண்டி தவெக மாநாடு: 21 கேள்விகளுக்கு பதில் கேட்டு புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை கடிதம் | Police letter to Bussi Anand regarding Vikravandi conference


விழுப்புரம்: விக்கிரவாண்டியில் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு செய்யப்படவிருக்கும் ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் மாவட்ட காவல் துறை அனுப்பி இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு 5 நாட்களுக்குள் பதிலளிக்கவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23-ம் தேதி கூட்டுகிறார் நடிகர் விஜய். இதற்காக அனுமதி கோரி கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் அக்கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அன்றே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “மாநாடு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடம் தேசிய நெடுஞ்சாலைக்கும், ரயில் பாதைக்கும் இடைப்பட்டதாகும். இங்கு 5-க்கும் மேற்பட்ட ஆழமான கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளை மூடவேண்டும். மேலும், ஒரு நபர் அமர 10 சதுர அடி இடம் தேவைப்படும். மேடைக்கு 5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டாலும் ஒரு ஏக்கருக்கு 4,300 பேர் வரை அமரலாம். அதன்படி சுமார் 3 லட்சம் பேர் வரை மாநாட்டுத் திடலில் அமரலாம்.

தென் மாவட்டங்களில் தொகுதிக்கு 500 பேர் என 100 தொகுதிகளுக்கு 50 ஆயிரம் பேரும், எஞ்சிய 134 தொகுதிக்கு ஆயிரம் பேர் வீதம் 1 லட்சத்து 34 ஆயிரம் வரக்கூடும். இதில்லாமல் புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆயிரம் பேர் வரலாம். இவை அனைத்தையும் சேர்த்தால் மாநாட்டுக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

வாகனங்களை நிறுத்துவதற்காக 28 ஏக்கர் நிலமும், சென்னை, புதுச்சேரி மற்றும் அருகாமை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 40 ஏக்கர் நிலமும், டூவீலர்களை நிறுத்த தனியாக 3 ஏக்கர் நிலமும் தயார் செய்யப்படுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உளுத்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் தேமுதிக மாநாடு நடத்தப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்துதான் மாநாட்டுக்கான அனுமதி வழங்கப்படும்” என்றனர்.

மேலும், இது குறித்து அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, “பொதுவாக கட்சி மாநாடுகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், செப்டம்பர் 23ம் தேதி திங்கட்கிழமையாக உள்ளது. கூட்டம் பார்க்க கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், முழு உணர்வோடும், எழுச்சியோடும் உள்ளவர்கள், மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வருவதற்கு வசதியாகவே இந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்தே இம்மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பெருமளவு இளைஞர்கள் பங்கேற்பார்கள். ஒருவேளை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற முயற்சிப்பார்கள். இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் அரசு அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று மாநாடு ஏற்பாடுகளை செய்வது சவாலான காரியம் தான்” என்றார்கள்.

இந்நிலையில் விழுப்புரம் டிஎஸ்பி-யான சுரேஷ் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இன்று (செப்.2) அனுப்பிய கடிதத்தில், 21 கேள்விகளை பட்டியலிட்டு அவற்றுக்கு 5 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அக்கேள்விகள் வருமாறு:

1 மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?

2. மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விவரம்?

3. மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்கள் யார்? அவர்களிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா?

4. மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள் பெயர் பட்டியல்.

5. மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவிருக்கும் நபர்களின் பெயர் விவரம்.

6. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன?

7. மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம்.

8. மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம்.

9. மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம்.

10. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள்? யாருடை தலைமையில் வருவார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விவரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை? (இருச்சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் விவரம்)

11. மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

12. மாநாட்டில் வாகனங்கள் நிறுத்து மிடங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? அவர்களின் பெயர் விவரம் மற்றும் சீருடை விவரம்?

13. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு செய்யப்படவுள்ள பாதுகாப்பு வசதிகள் விவரம்.

14.மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விவரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா? அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா? (குடிநீர், கழிப்பிடம்… இதர.,)

15. மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா?

16. மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விவரம்.

17.மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா? அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸின் விவரங்கள்.

18.மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?

19.கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விவரம்.

20.மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கும் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?

21.மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விவரம்.இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *