
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டில் அவரது 102-ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் பேராசிரியர்களும், தமிழ் பயிலும் மாணவர்களும், பாரதியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாரணாசியின் கங்கை கரையில் அனுமன் காட் எனும் படித்துறை பகுதியிலுள்ள வீட்டில் மகாகவி பாரதியார் சில ஆண்டுகள் வாழ்ந்தார். இங்கு தற்போது அவரது சகோதரியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில், மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மகாகவி பாரதியாருக்கு அஞ்சலி செலுத்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் இந்திய மொழிகள் துறை சார்பில் அதன் தமிழ் பிரிவு மாணவர்கள் வந்திருந்தனர்.