
சென்னை: பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வாணியம்பாடி அருகே நேற்று அதிகாலை அரசு விரைவுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினார். அப்போது முதல்வர் கூறியதாவது:
பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பயணிகளை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டும். அனைத்து பேருந்துகளிலும் குறிப்பிட்ட வேக வரம்புக்கு கட்டுப்பட்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்து ஓட்டும்போது கவனச் சிதறல்கள் இல்லாமல் இயக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளா். முதல்வர் உத்தரவுபடி அனைத்து ஓட்டுநர்களும் பேருந்துகளை கவனமுடன் இயக்கி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.