
புதுடெல்லி: வனவாசி சமூக சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வனவாசி சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் வனவாசி பெருமித தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிர்சா முண்டாவின் உருவச் சிலைக்கும், அதன் அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அங்கு நடைபெற்ற வனவாசி மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வனவாசி மக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனாட்சி லேகி, வனவாசி பெருமித தினம் மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் வனவாசி மக்கள் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்கிறது. வனவாசி மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அருசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.
பிர்சா முண்டாவின் பிறந்த இடமான ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டுவில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, அந்த கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள மிகப் பெரிய பிர்சா முண்டாவின் சிலைக்கு பிரதமர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, குந்தியில் நடைபெற்ற கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.