
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.4.36 கோடியில் அருங்காட்சியகம், திரையரங்கம் அமைக்கப்பட உள்ளன. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்கினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பார்வையாளர்களை மேலும் கவரும் வகையிலும், இளம் தலைமுறையினருக்கு வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பூங்காவில் புதிய வசதிகளை ஏற்படுத்த பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இப்பூங்காவில் நவீன அருங்காட்சியகம், திரையரங்கம் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து தமிழக வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு நேற்று பிறப்பித்த அரசாணையில் கூறியுள்ளதாவது: சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முன்னெடுப்புகள் வெற்றிபெற, இயற்கை பாரம்பரியங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து வருங்கால தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
இதற்காக, சென்னை வண்டலூர் பூங்காவில் உயிரியல் பூங்கா அருங்காட்சியகம், திரையரங்கம் ஆகியவற்றை அமைக்க வனத்துறை தலைவர், கருத்துரு அனுப்பிஉள்ளார். இதன் மூலம், வனவிலங்குகளை அதன் வாழ்விடங்களில் பாதுகாப்பது தொடர்பாக இளம் தலைமுறையினர் மனதில் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர முடியும். வன உயிரினம், இயற்கை பாதுகாப்பு குறித்து அவர்கள் மனதில் ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும் என்று கருத்துருவில் அவர் தெரிவித்துள்ளார்.
பூங்காவில் உள்ள பழைய அரங்கம், 3டி அல்லது 7டி திரையரங்கமாக புதுப்பிக்கப்படும். பூங்கா அருங்காட்சியகத்தில் பல்வேறு உயிரினங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு ரூ.4.36 கோடி செலவாகும். இப்பணிகளை 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதை கவனத்துடன் பரிசீலித்த அரசு, இத்திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.