சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சைமன்’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
போஸ்டர் எப்படி? – கையில் தங்க நிற வாட்சை கட்டிக்கொண்டு, ப்ளாக் அன்ட் வொயிட்டில் மாஸான லுக்கில் கவர்கிறார் நாகார்ஜுனா. தாடியும், கூலிங் கிளாஸுமான தோற்றத்தில் காட்சியளிக்கும் அவரது அசால்ட்டான போஸ் கவனிக்க வைக்கிறது. ‘சைமன்’ கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் முந்தைய ‘லியோ’ படத்தின் வில்லன்கள் இருவருக்கும் ‘ஆண்டனி தாஸ்’, ‘ஹேரால்டு தாஸ்’ என பெயரிடப்பட்டிருந்தது.
அந்த வகையில், ‘சைமன்’ இப்படத்தின் வில்லனாக இருக்கலாம் என தெரிகிறது. அப்படியிருக்கும்பட்சத்தில் ரஜினி – நாகார்ஜுனாவின் எதிரெதிர் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வாய்ப்புள்ளது. முன்னதாக நேற்று (ஆக.28) இப்படத்தில் நடிக்க இருக்கும் சவுபின் ஷாயிரின் ‘தயாள்’ கதாபாத்திர போஸ்டர் வெளியாகியிருந்தது. அவர் கையிலும் தங்க நிற வாட்ச் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.