சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினி கதாப்பாத்திரத்தின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தேவா’ என்ற அவரது கதாபாத்திர போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கறுப்பு வெள்ளை பின்னணியில் ஈர்க்கிறார் ரஜினிகாந்த். கையில் 1421 என்ற எண்ணிடப்பட்ட சுமை தூக்குவோர் கையில் அணியும் பேட்ச் ஒன்றை வைத்துக்கொண்டு அதனை பெருமிதத்துடன் பார்க்கிறார். கறுப்பு தலைமுடி, மீசை, தாடியுடன் தோற்றமளிக்கும் அவரது லுக் கவனிக்க வைக்கிறது. மேலும், இப்படத்தில் ரஜினி ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், தளபதி படத்தில் ரஜினியின் நண்பராக ‘தேவா’ என்ற கதாப்பாத்திரத்தில் மம்முட்டி நடித்திருப்பார் என்பது கவனிக்கத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாரம் முழுவதும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி இதுவரை, சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.