
ஜெய்ப்பூர்: உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை ரூ.450-க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் முன்னிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள்: பாஜக வெற்றி பெற்றால் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மாநிய விலையில் ரூ.450-க்கு சிலிண்டர் வழங்கப்படும்; கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ.2,700 போனஸ் வழங்கப்படும்; பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கான சேமிப்பு வைப்பு நிதி வைக்கப்படும்; ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெண்களின் குறைகளைக் கேட்க ஓர் இருக்கை ஏற்படுத்தப்படும்; பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து சட்டப்படி தண்டிக்க ஒவ்வொரு மாநகரிலும் தனிப்படை ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.