சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில், “ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) த/பெ. ரமேஷ் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாயும், இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் உள்ள கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் சிறுமி நவிஷ்கா பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிக்கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் அடுத்தடுத்து அந்த சிறுமி மீது விழுந்து தீ பிடிக்க மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.