
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் அரச பரம்பரையை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே இன்றளவும் ஹதோதி பகுதியில் அசைக்க முடியாத ராணியாக வலம் வருகிறார். மத்திய பிரதேசத்தின் குவாலியர் அரச பரம்பரையை சேர்ந்தவர் வசுந்தரா ராஜே. கடந்த 1972-ம் ஆண்டில் அவருக்கும் ராஜஸ்தானின் ஹதோதி பகுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணா ஹேமந்த் சிங்குக்கும் திருமணம் நடைபெற்றது.
தற்போது ஹதோதி அரச குடும்பத்தின் பட்டத்து ராணியாக வசுந்தரா ராஜே உள்ளார். ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹதோதி பகுதியில் அவர் இன்றளவும் யாராலும் அசைக்க முடியாத ராணியாக வலம் வருகிறார். ஹதோதி பிராந்தியத்தில் 17 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் வசுந்தரா ராஜேவின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு 16 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அப்போது மாநிலத்தின் முதல்வராக வசுந்தரா ராஜே பதவி வகித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அப்போதும் ஹதோதி பகுதியில் 10 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வசுந்தரா ராஜேவின் தனிப்பட்ட செல்வாக்கால் ஹதோதியில் பாஜகவின் கை ஓங்கியிருக்கிறது. அந்தப் பகுதியின் ஜால்ராபாடன் தொகுதி பாஜக வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து தொழிலதிபர் ராகேஷ் மீனா கூறும்போது, “ராஜஸ்தான் முதல்வராக வசுந்தராராஜே பதவியேற்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அவரது தலைமையில் புதிய ஆட்சி அமையும்’’ என்று தெரிவித்தார்.
குடும்பத் தலைவி சோனியா சைனி கூறும்போது, “எங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் வசுந்தரா ராஜேவே மூலக்காரணம். சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் அவருக்கே ஆதரவு அளிப்போம்’’ என்றார்.
உள்ளூர் ஆசிரமத்தின் தலைவர் ராம்பாபு கூறும்போது, “எங்கள் பகுதியில் மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம், பேருந்து முனையம், ரயில்வே வழித்தடம் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் வித்திட்டவர் வசுந்தரா ராஜே. அவரே மீண்டும் முதல்வராக பதவியேற்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக யாரும் முன்னிறுத்தப்படவில்லை. முதல்வர் பதவிக்கான போட்டியில் வசுந்தராராஜே ஓரம் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாஜக மூத்த தலைவர்கள் பாலக்நாத், ராஜேந்திர ரத்தோர், சதீஷ் பூனியா, சி.பி.ஜோஷி உள்ளிட்டோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
எனினும் தேர்தலுக்குப் பிறகுவசுந்தரா ராஜே மீண்டும் பாஜகவில்செல்வாக்கு பெற்று முதல்வர் பதவியில் அமருவார் என்று ஹதோதி பகுதி மக்கள் நம்பிக்கை யுடன் கூறுகின்றனர்.