
பேட்டுல் (மத்தியப் பிரதேசம்): மோடியின் உத்தரவாதத்துக்கு முன் தங்களின் வாக்குறுதிகள் நிற்காது என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொண்டு விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் வரும் 17 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பேட்டுல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், “இந்தத் தேர்தலில் தங்களால் வெற்றி பெற முடியாது என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொண்டுவிட்டது. அதன் காரணமாகவே, அக்கட்சியின் தலைவர்களை பிரச்சாரங்களில் பார்க்க முடிவதில்லை.
மத்தியப் பிரதேசத்தின் கஜானாவில் காங்கிரஸ் கை வைப்பதை தடுக்கும் தேர்தல் இது. எப்படியெல்லாம் காங்கிரஸ் ஊழல் செய்தது என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததோ அப்போதெல்லாம் வளர்ச்சி தடை பட்டுள்ளது. தேர்தல் நாள் நெருங்கிவிட்டது.
காங்கிரஸ் கட்சி அம்பலப்பட்டுவிட்டது. முழு மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், தங்கள் தோல்வியை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுவிட்டது என்பதும், அதிர்ஷ்டத்தை மட்டுமே தற்போது அவர்கள் நம்புகிறார்கள் என்பதுமே.
காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். வெளியே செல்வதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை. மக்களிடம் என்ன கூறுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தங்களின் போலி வாக்குறுதிகள், நரேந்திர மோடியின் உத்தரவாதத்துக்கு முன் நிற்காது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ஒருபோதும் ரத்து செய்ய முடியாது எனக் கூறி வந்த கட்சி காங்கிரஸ். அதற்போது அந்த பிரிவை பாஜக தலைமையிலான அரசு நீக்கிவிட்டது. அதேபோல், அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க வாய்ப்பே இல்லை என கூறி வந்த காங்கிரஸ் கட்சி, தற்போது எப்போது கட்டுமானம் நிறைவடையும் என கேட்கத் தொடங்கி இருக்கிறது” என தெரிவித்தார்.