
கோவை: மேட்டுப்பாளையம் – உதகை இடையே, விடுமுறை கால சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 2 மணிக்கும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் பண்டிகை காலத்தையொட்டி மேட்டுப்பாளையம் – உதகை மற்றும் உதகை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு மலை ரயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு உதகையைச் சென்றடைந்தது. முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், இரண்டாவது வகுப்பில் 140 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு மலை ரயில் இன்று (செப்.18) காலை 11.25 மணிக்கு புறப்பட்டு,மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கும், அக்டோபர் 2 -ம் தேதி உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 21, 23-ம் தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கும், 22, 24-ம் தேதிகளில் உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.