
மதுரை: உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ ஐ.மகேந்திரன் அதிமுகவில் இணைந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஐ.மகேந்திரன். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தஇவர் அமமுக தலைமைக்கழக செயலாளர், மதுரை புறநகர்மாவட்டச் செயலாளராக இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிடிவி.தினகரன் அமமுக தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்தார். 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் 31,199 (13.80 சதவீதம்) வாக்குகள் பெற்றார்.
இதனால் அங்கு அதிமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக இருந்த திமுக வென்றது. 2021-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் உசிலம்பட்டியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிட்ட மகேந்திரன் 55,491 (26.11 சதவீதம்) வாக்குகள் பெற்றார். இதனால் திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன் தோல்வியடைந்து அய்யப்பன் (அதிமுக) வெற்றி பெற்றார்.
டிடிவி தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த அவர், சேலத்தில் நேற்று முன்தினம் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடன் இருந்தார்.