
புதிய தொழில் வாய்ப்புகளை அள்ளித்தரும் துறையாக இந்திய மீன்வளத்துறை உருவெடுத்து வருகிறது. இளம் தொழில் முனைவோரையும், புதிய முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் துறையாக இன்று வளர்ந்து வருவதற்கு மத்திய அரசு மீன் வளத்துறை மீது காட்டி வரும் தனிப்பட்ட கவனமும், அதிகபட்ச முதலீடும் முக்கியக் காரணம். இந்தியாவில், மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டிவரும் துறையாக மீன் வளத்துறை வளர்ந்துள்ளது. இதற்கு இந்தியாவில் பரந்துவிரிந்துள்ள 8 ஆயிரம் கி.மீ. பரப்புள்ள கடற்பரப்பு முக்கியக் காரணமாகும்.
நீலப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு, நீலப் புரட்சித் திட்டத்தை 2015-ம் ஆண்டில் கொண்டு வந்து ரூ. 5 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. அத்துடன் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக 2017-ம் ஆண்டில் ரூ. 7,522 கோடியை ஒதுக்கி பணிகளை முழுவீச்சில் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக 2.8 கோடி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படத்தொடங்கியது. 2019-ல் மீன் வள அமைச்சகத்தை உருவாக்கி தனிக்கவனம் செலுத்தத் தொடங்கியது.
பிற தொழில்களுக்கு மத்திய அரசு அளித்த ஊக்குவிப்பைப் போன்று 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 20,050 கோடி மதிப்பிலான பிரதான் மந்திரி மத்ஸய சம்படா யோஜனா (பிஎம்எம்எஸ்ஒய்) எனும்மாபெரும் முதலீட்டுத் திட்டம் மீன்வளத்துறைக்கென அறிவிக்கப்பட்டது. மீன் வளத்துறை வளர்ச்சிக்குப் பிரதான காரணிகளான தொழில்நுட்பம், கட்டமைப்பு வசதி, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட தொடர்செயல்பாடுகளுக்கு இத்திட்டம் முன்னுரிமை அளித்தது. கடல் மீன்பிடிப்பு மட்டுமின்றி, உள்நாட்டில் மீன்பிடித்தல், குளங்களில் மீன் வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு, மீன் குஞ்சு பொரிப்பகம், மீன்களுக்குத் தேவையான தீவனம் உள்ளிட்ட அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கட்டமைப்பு வசதிகளில் மிகவும் முக்கியமான ஒன்றான மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய துறைமுகங்கள் கட்டப்பட்டதோடு, ஏற்கெனவே செயல்பட்டு வந்த துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் மீன்பிடி கப்பல்கள், படகுகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, 1043 மீன்பிடி கப்பல்களை மேம்படுத்தவும், 67,468 படகுகள் மற்றும் 4,561 மீன் பிடி கப்பல்களை புதிதாக மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயற்கைக் கோள் இணைப்பு அடிப்படையில் செயல்படும் 1 லட்சம் தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்களை நிறுவவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பிடித்த மீன்களை உரிய நேரத்தில் சந்தைக்கு கொண்டு சேர்க்க வசதியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விற்பனை செய்ய 6,700-க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் மற்றும் சந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீன்களை பாதுகாக்க 560குளிர்பதனக் கிடங்குகளும் உருவாக்கப் பட்டதால் மீனவர்களுக்கு நிலையான நிரந்தரமான வருமானம் கிடைக்க வழியேற் படுத்தப்பட்டது. ஆபத்து நிறைந்த மீன்பிடித் தொழிலில் மீனவர்களின் குடும்ப நலனில் அக்கறை கொண்டு குழு விபத்து காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கிசான் அட்டை மூலம் நிதி உதவிபெறும் வசதி மீனவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிதி உதவி கிடைக்கவும், அவர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஊட்டச் சத்து உணவு கிடைக்கவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க அலங்கார மீன் வளர்ப்புத்தொழிலில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களும் இத்தொழிலில் முக்கிய பங்களிப்பை அளிக்க வழியேற்படுத்தப்பட்டுள்ளது. மீன் குஞ்சு, தீவனம், மீன் இனவிருத்தி ஆகியன மீன்வளத்துறையின் முக்கியக் கூறுகளாகும். 900 மீன் தீவனஆலைகள், 755 மீன்குஞ்சு பொரிப்பகங்கள் உருவாக பிஎம்எம்எஸ்ஒய் திட்டம் வழி வகுத்துள்ளது. அத்துடன் இந்தியாவின் வெள்ளை இறால்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மரபணு மேம்பாட்டு மையம் சென்னையிலும், குறிப்பிட்ட நோய்க்கிருமிகள் இல்லாத மீன் அடைகாக்கும் வசதி மற்றும் புலி இறால் வளர்ப்பு அந்தமானிலும் செயல்படுத்தப்படுகிறது. உள்நாட்டு மீன் வளர்ப்பின்கீழ் ஏறக்குறைய 20 ஆயிரம் ஹெக்டேரில் நன்னீர் குளம் உருவாக்கப்பட்டு மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
செல்வம் கொழிக்கும் நிலம்: நிலப்பரப்பு அதிகம் உள்ள ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் பகுதி விவசாயிகள் தங்களது உப்பங்கழி நிலங்களில் மீன் களை வளர்த்து அவற்றை செல்வம் கொழிக்கும் நிலமாக மாற்றி வருகின்றனர். பிஎம்எம்எஸ்ஒய் திட்டம் செயல்படுத்தப்பட்டு மூன்றாம் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம்.
மூன்று ஆண்டுகளில் இத்துறை எட்டியுள்ள வளர்ச்சி அபரிமிதமானது. இன்று, இந்தியாவின் மீன்வள உற்பத்தி (தற்காலிக புள்ளி விவரம் 2022-23 அடிப்படையில் 174 லட்சம் டன்) மற்றும் ஏற்றுமதி வருமானம் முன்னெப்போதையும் விட மிக அதிகமான அளவை எட்டியுள்ளது. 2013-14-ம் ஆண்டில் 3.22 லட்சம் டன்னாக இருந்தது. தற்போது (2022-23) 11.84 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2012-14-ம் ஆண்டில் ரூ. 30,213 கோடியாக இருந்தது. தற்போது இரு மடங்கு அதிகரித்து 2022-23-ம் ஆண்டில் ரூ. 63,969 கோடியை எட்டியுள்ளது.