
சென்னை: விவசாயத்துக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தில் மின்இழப்பு, மின்தடை ஏற்படுவதை தடுக்க, குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை நிறுவ மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மூலம் மின்சாரம் விநியோகம்செய்யப்படுகிறது. இதற்காக, 500கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மின்மாற்றியில் குறைந்தபட்சம் 500 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால்,மின்விநியோகத்தில், குறிப்பாகவிவசாயத்துக்கான மின்விநியோகத்தின்போது மின்இழப்பு ஏற்படுவதோடு, அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. அதிக திறன் கொண்டமின்மாற்றிகளை பயன்படுத்துவதுதான் மின்இழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மின்இழப்பு 13 சதவீதம்: தமிழகத்தில் தற்போது 63 கிலோவாட், 100 கிலோவாட், 250கிலோவாட், 500 கிலோவாட் திறன்கொண்ட 4.07 லட்சம் மின்மாற்றிகள் உள்ளன. மின் வாரியத்தின் மின்இழப்பு 13 சதவீதமாக உள்ளது.
அதேநேரம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 4 கிலோவாட், 10 கிலோவாட் என குறைந்த திறன்கொண்ட மின்மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதை பின்பற்றி, தமிழகத்தில் 16 கிலோ வாட், 25 கிலோவாட் என குறைந்த திறன் கொண்டமின்மாற்றிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்மாற்றிகளின் திறனை குறைப்பதால், மின்இழப்பு 10 சதவீதமாக குறையும்.
தற்போது 500 கிலோவாட் மின்மாற்றியை நிறுவ ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. குறைந்த திறன் மின்மாற்றிகளை நிறுவுவதால் செலவும் மிச்சமாகும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.