
சென்னை: சென்னை கண்ணகி நகரில் மாநகராட்சி நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவர் இல்லாததால் தலையில் காயமடைந்த மாநகராட்சி ஆணையரின் உதவியாளருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பலமுறை அழைத்தும் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்ததாலும் ஆணையர் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். சென்னை திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த, கண்ணகி நகரை சேர்ந்ததூய்மை பணியாளர் சிவகாமிகுடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில்இருந்து ரூ.5 லட்சம் வழங்கமேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேற்று அவரது இல்லத்துக்குச் சென்றனர்.
அப்போது ஆணையரின் கார் கதவை அவரது உதவியாளர் பிரபாகர் திறக்க முயன்றார். அதற்குள் ஆணையர் கதவைதிறந்ததால் பிரபாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை தனது காரிலேயே அழைத்துக் கொண்டு 24 மணி நேரமும் இயங்கும் நகர்ப்புற சமுதாய நல மையத்துக்கு அழைத்து சென்றார் ஆணையர். ஆனால், அங்குமருத்துவர் இல்லை. இதையடுத்து அருகில் உள்ள தனியார்மருத்துவமனையில் முதலுதவிசிகிச்சை வழங்கப்பட்டது. அதன்பிறகு, அவரை அரசுராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்ப, ஆணையர் ராதாகிருஷ்ணனே 108 எண்ணை தொடர்பு கொண்டு, தான் மாநகராட்சி ஆணையர் பேசுவதாகக் கூறி ஆம்புலன்ஸை அழைத்தார்.
ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமான நிலையில், கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு பேசினார். சரியான முகவரி தெரிவிக்கப்பட்டும் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனார்மீண்டும் கட்டுப்பாட்டு அறையை ஆணையர் தொடர்புகொண்ட நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ஒன்றில் உதவியாளரை ஏற்றி அனுப்பி வைத்தார். இச்சம்பவங்கள் ஆணையரையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மருத்துவமனையில் மருத்துவர் இல்லாதது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.