சந்திரபாபு பாடி நடித்த பாடல்கள், இப்போது கேட்டாலும் ‘கூஸ்பம்ப்’ உணர்வை தருகின்றன. அவர் குரலும் நடனமும் அந்தப் பாடல்களைஇன்றும் உயிர்ப்புள்ளதாகவே வைத்துள்ளன. அதில் ஒரு பாடல், ‘குங்குமப் பூவே கொஞ்சும்புறாவே’! இந்தப் பாடல் இடம்பெற்ற படம் ‘மரகதம்’.
ஜெகதலபிரதாபன் (1944), கன்னிகா (1947), பவளக்கொடி (1949), மலைக்கள்ளன் (1954) என பல மறக்க முடியாத திரைப்படங்களைக் கொடுத்தவர், கோவை பக் ஷிராஜா ஸ்டூடியோவின் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு. அவர் தயாரித்து இயக்கிய படங்களில் ஒன்று ‘மரகதம்’. டி.எஸ்.துரைசாமி எழுதிய துப்பறியும் நாவலான, ‘கருங்குயில் குன்றத்துக் கொலை’யை சினிமாவுக்காக ‘மரகதம்’ ஆக்கிஇருந்தார். இந்நாவல் வெளியான காலகட்டத்தில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
விக்ரம் நடித்த உல்லாசம், ஷெரின் நடித்த விசில்,சரவணன் நடித்த லெஜண்ட் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரியில், ஜேடியின் பூட்டனார்தான், இந்த நாவலை எழுதிய டி.எஸ்.துரைசாமி. ‘மரகதம்’ படத்தின் திரைக்கதையையும் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு பார்த்துக்கொள்ள, முரசொலி மாறன் வசனம் எழுதினார்.
சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.பாலசந்தர், சந்தியா, டி.எஸ். பாலையா, டி.எஸ்.துரைராஜ், ஜே.பி.சந்திரபாபு, ஓ.ஏ.கே.தேவர், சந்தியா, பி.எஸ்.ஞானம், முத்துலட்சுமி, லட்சுமிராஜம், லட்சுமிபிரபா, எம்.ஆர்.சந்தானம் என பலர் நடித்தனர்.
விறுவிறுப்பானத் துப்பறியும் கதைதான் படம். கருங்குயில் குன்றத்து ஜமீன்தார் மர்மமான முறையில் கொல்லப்பட, அந்தப் பழி ஜமீனின் தம்பி, மார மார்த்தாண்டன் (பாலசந்தர்)மீது விழுகிறது. அவர் தன் மனைவியை(சந்தியா)விட்டுவிட்டு, மகள் மரகதத்துடன் இலங்கைக்குத் தப்பிஅங்கு வாழ்ந்து வருகிறார். இலங்கையில் கொள்ளைக் கூட்டத்தால் கடத்தப்படும் கருங்குயில் குன்றத்து இளைய ஜமீன் வரேந்திரனை மீட்கிறார் மரகதம். அவர் சகோதரி மகள் என்பது தெரியாமலேயே காதல் வருகிறது வரேந்திரனுக்கு. பிறகு உண்மை தெரியவர, ஜமீனைக் கொன்ற கொலையாளியை கண்டறிய வேலைக்காரனாக மாறுவேடம் போடுகிறார் வரேந்திரன். பிறகு, வழக்கம்போல கொலையாளியை கிளைமாக்ஸில் கண்டுபிடிக்கிறார்கள்.
நாவலில், நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். ஆனால் படத்துக்காக சில மாற்றங்களைச் செய்திருந்தார்கள். வரேந்திரனாக சிவாஜி, மரகதமாக பத்மினி சிறப்பாக நடித்திருந்தனர். பத்மினியின் தந்தையாக நடித்த எஸ்.பாலசந்தர், புதிய தோற்றத்தில் கவனிக்க வைத்தார். வில்லனாக டி.எஸ்.பாலையா மிரட்டியிருப்பார். சிவாஜியின்நண்பராக சந்திரபாபு நகைச்சுவை ஏரியாவை பார்த்துக்கொண்டார்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை. பாபநாசம் சிவன், கு.மா.பாலசுப்பிரமணியம், ரா.பாலு பாடல்கள் எழுதியிருந்தனர்.
‘புன்னகை தவழும் மதி முகமோ’, ‘கண்ணுக்குள்ள உன்னைப் பாரு’, ‘மாலை மயங்குகின்ற நேரம்’, சந்திரபாபு, ஜமுனா ராணியுடன் பாடிய ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’ உட்பட சில பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
இன்றுவரை ரசிக்கப்பட்டு கொண்டிருக்கும் ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’ பாடலை எழுதியவர் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம். ‘சபாஷ் மீனா’ படத்தில் சந்திரபாபுவுக்காக, இசை அமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா அமைத்த பாடல் இது. தயாரிப்பாளர் பந்துலுவுக்கும் சந்திரபாபுவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையால், அந்தப் பாடல் ஒலிப்பதிவின்போது, ‘ஆர்கெஸ்ட்ரா குறைவாக இருக்கிறது’ என்று பாட மறுத்துவிட்டார் சந்திரபாபு. பிறகு அதே பாடலை சுப்பையா நாயுடுவிடம் கொடுத்து ‘மரகதம்’ படத்தில் சேர்த்ததாகச் சொல்கிறார்கள்.
1959-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கவனிக்கப்பட்டது.