
புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகக் குழுவில் அதானி நிறுவனத்தின் ஆலோசகர் உறுப்பினராக இடம்பெற்றிருப்பது தேசிய அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்டின் முக்கிய ஆலோசகர் இப்போது மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் (EAC- Expert Appraisal Committee) உறுப்பினராக இடம்பெற்றிருப்பது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
செப்டம்பர் 27 அன்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், EAC குழுவை மறுசீரமைத்தபோது, ஏழு நிறுவன சாரா உறுப்பினர்களில் ஒருவராக ஜனார்தன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மறுசீரமைக்கப்பட்ட EAC (hydel) நீர்மின் திட்டத்தின் முதல் கூட்டம் அக்டோபர் 17-18 அன்று நடைபெற்றது. மகாராஷ்டிராவின் சதாராவில் AGEL-இன் 1500 மெகாவாட் தரலி பம்பிங் சேமிப்புத் திட்டம் பரிசீலனைக்கு வந்தது. இந்த நிலையில், அக்டோபர் 17 அன்று ஜனார்தன் சவுத்ரி கூட்டத்தில் கலந்துகொண்டதாக பதிவுகள் காட்டுகின்றன. “இதற்கு முன்பு நாங்கள் பணியாற்றிய நிறுவனங்களுடைய திட்டங்களுக்கான விவாதங்களில் கருத்து தெரிவிக்க கூடாது என்ற எழுதப்படாத ஒப்பந்தம் எங்கள் குழு உறுப்பினர்களிக்கிடையே இருக்கிறது. அதன் அடிப்படையில் அதானி நிறுவனத்தின் திட்டத்துக்கான விவாதத்தில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டது” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
ஜனார்தன் சவுத்ரி NHPC நிறுவனத்தில் 36 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதன் பிறகு மார்ச் 2020-இல் ஓய்வு பெற்றார். அவர் ஏப்ரல் 2022-இல் அதானியின் AGEL நிறுவனத்தின் ஆலோசகராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. “அதானி குழும ஊழியரான ஜனார்தன் சவுத்ரி, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் EAC-யின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த கமிட்டி, அதானியின் ஆறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துவிடும்” என்று கேரள காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில், “நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மின்னஞ்சலைப் பகிர்ந்ததற்காக, தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் எனக் கூறி, அவரை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, குற்ற உணர்வுடையவராகக் கருதுகிறது. அப்படியிருக்கும்போது, ஒரு தனியார் நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரியும் ஒருவர், எப்படி மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அவரைத் தேர்ந்தெடுத்தது யார்? அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க இங்கே இவர்களுக்கு எந்த காரணமும் கிடைக்கவில்லையா” எனப் பதிவிட்டிருக்கிறார்.