
புதுடெல்லி: ‘ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா 2023’ வரைவு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கருத்துகளைக் கோரியுள்ளது. இந்தத் துறையின் வல்லுநர்கள், ஒலிபரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்கள் 30 நாட்களுக்குள் கருத்துகளை அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: ‘கேபிள் நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1995’ என்பது 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இது கேபிள் நெட்வொர்க்குகள் உட்பட நேரியல் ஒளிபரப்பில் உள்ளடக்கத்தைக் கண்காணிக்கும் முதன்மைச் சட்டமாக செயல்படுகிறது. இருப்பினும், இடைப்பட்ட காலத்தில் ஒலிபரப்புத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் டி.டி.எச், ஐபிடிவி, ஓடிடி மற்றும் பல்வேறு ஒருங்கிணைந்த புதிய தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஒலிபரப்புத் துறை, குறிப்பாக கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், கட்டமைப்பை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. இது வணிகம் செய்வதை எளிதாக்குவதை உறுதிப்படுத்த வகை செய்கிறது. மிகவும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தை உணர்ந்து, தற்போதுள்ள கட்டமைப்புக்கு பதிலாக ஒரு புதிய, விரிவான சட்டம் தேவைப்படுகிறது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ‘ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) வரைவு மசோதா, 2023’-ஐ முன்மொழிந்துள்ளது. இந்த வரைவு மசோதா நாட்டில் ஒலிபரப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை வழங்கும். மேலும், நாட்டில் தற்போது ஒலிபரப்புத் துறையை நிர்வகிக்கும் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1995 மற்றும் பிற கொள்கை வழிகாட்டுதல்களை மாற்ற முயற்சிக்கிறது.
இந்த மசோதா ஓவர்-தி-டாப் (ஓடிடி) உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் செய்திகளை உள்ளடக்குவதற்கு அதன் வரம்பை விரிவுபடுத்துகிறது. மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான சமகால வரையறைகள் மற்றும் விதிகளை அறிமுகப்படுத்துகிறது. இதில் சட்டரீதியான அபராதங்கள் போன்றவற்றை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஆறு அத்தியாயங்கள், 48 பிரிவுகள் மற்றும் மூன்று அட்டவணைகளைக் கொண்டுள்ளது. ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா, 2023 மூலம் நாட்டில் வெளிப்படைத்தன்மை, சுய ஒழுங்குமுறை மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள ஒலிபரப்பு சேவைகளின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
இந்தத் துறையின் வல்லுநர்கள், ஒலிபரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பரந்த அளவிலான பங்குதாரர்களிடமிருந்து மேற்கண்ட மசோதா குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் அமைச்சகம் வரவேற்கிறது. இந்தச் செய்திக்குறிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் jsb-moib@gov.in என்ற மின்னஞ்சலுக்கு கருத்துகளை அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.