State

மதுரை மாநகராட்சியில் தெருவெல்லாம் தேங்கும் குப்பை: காம்பக்டர் வாகனங்கள் பற்றாக்குறை காரணமா? | Madurai Corporation are full of garbage

மதுரை மாநகராட்சியில் தெருவெல்லாம் தேங்கும் குப்பை: காம்பக்டர் வாகனங்கள் பற்றாக்குறை காரணமா? | Madurai Corporation are full of garbage


மதுரை: மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளை உரக்கிடங்குக்கு எடுத்து செல்லும் டம்பர் பிளேசர் லாரிகள், காம்பாக்டர் வாகனங்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், மாநகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் தெருக்கள், சாலைகளில் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஒரு நாளைக்கு 800 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகின்றன. அதிகாலை காலையில் 5.30 மணி முதல் தூய்மைப்பணியாளர்கள் நகரில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை தொடங்குகிறார்கள். முதற்கட்டமாக 5.30 மணிக்கு கோவில்கள், முக்கிய சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சேரும் குப்பைகளை அகற்றுகிறார்கள். அடுத்தக்கட்டமாக குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகிறார்கள். 100 வார்டுகளிலும் சேர்த்து நிரந்தர பணியாளர்கள், தினக்கூலி மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் 4,000 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.

இவர்களுக்கு வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதற்கு மூன்று சக்கர மிதிவண்டிகள், பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்று சக்கர மிதி வண்டிகளில் செல்வோர் ஒரு நாளைக்கு 200 வீடுகளிலும், பேட்டரி வாகனங்களில் செல்வோர் 900 வீடுகளிலும், இலகு ரக வாகனங்களில் செல்வோர் 1,200 வீடுகளிலும் குப்பைகளை சேரிக்க வேண்டும். ஆனால், இவர்களால் திட்டமிட்டப்படி சாலைகள், தெருக்கள், குடியிருப்புகளில் குப்பைகளை சேரிக்க முடியவில்லை. அதனால், மாநகராட்சியில் பல குடியிருப்புகள், தெருக்களில் குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்தும், சிதறியும் கிடக்கின்றன. மக்கள் அந்த சாலைகள், தெருக்களில் நடந்து செல்லவே முடியவில்லை. மழை பெய்தால் குப்பைகள் மழையில் நனைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதுபோல், வீடுகளிலும் குப்பைகள் சேகரிக்க வராமல் தேங்குகிறது. அதற்கு குப்பை சேகரிக்கும் வாகனங்களில் இருந்து, அவற்றை எடுத்து வெள்ளக்கல் உரக்கிடங்கிற்கு எடுத்து செல்லும் காம்பாக்டர் மற்றும் டம்பர் பிளேசர் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பற்றாக்குறையே முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ”மூன்று சக்கர மிதிவண்டிகள், பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள், இலகு ரக வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் சேகரித்த குப்பைகளை காம்பக்டர் வாகனங்களில் கொண்டு சென்று கொட்டுவார்கள். இந்த காம்பக்டர் வாகனங்கள் எடுத்த இந்த குப்பைகளை வெள்ளக்கல் உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டிவிட்டு மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் சேகரித்த குப்பைகளை எடுக்க வர வேண்டும். இந்த காம்பக்டர் வாகனங்கள் 16 முதல் 20 வாகனங்கள் இருக்க வேண்டும். ஆனால், மாநகராட்சியில் இருப்பது வெறும் 9 வாகனங்களே. இதிலும் ஒன்று ஸ்பேராக இருக்கும். 8 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்த வாகனம் ஒரு முறை வெள்ளக்கல் சென்று மீண்டும் வார்டுகளுக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. இந்த வாகனங்கள் மீண்டும் திரும்பி வந்தால் மட்டுமே தூய்மைப் பணியாளர்கள் தாங்கள் வாகனங்களில் சேகரித்த குப்பைகளை இந்த காம்பக்டர் வாகனத்தில் கொட்டிவிட்டு மீண்டும் வீடுகளில் குப்பை சேகரிக்க செல்ல முடியும். ஆனால், காம்பக்டர் வாகனங்கள் மிக குறைவாக உள்ளதால் அந்த வாகனங்கள் வெள்ளக்கல் சென்று வரும்வரை, தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளுடன் வார்டுகளில் காத்து கிடக்க வேண்டிய உள்ளது.

.

அதுபோல், மாநகராட்சி 100 வார்டுகளிலும் 600 ‘காம்பாக்டர் பின்’ குப்பை தொட்டிகள் முக்கிய சாலைகள், தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் குப்பைகளை இந்த ‘காம்பக்டர் பின்’ குப்பை தொட்டிகளில் வந்து கொட்டலாம். இந்த ‘காம்பக்டர் பின்’ குப்பை தொட்டிகளை ‘டம்பர் பிளேசர்’ என்ற வாகனங்கள் எடுத்து செல்ல வேண்டும். இந்த டம்பர் பிளேசர் வாகனங்கள் வெறும் 50 மட்டுமே உள்ளன. ஆனால், 80 டம்பர் பிளேசர் வாகனங்கள் தேவைப்படுகிறது. இந்த வாகனங்கள் ஒரு நடையில் 4 ‘காம்டக்டர் பின்’ களை மட்டுமே எடுத்து செல்ல முடியும். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 நடை மட்டுமே சென்று வர முடிகிறது. இதுதவிர ஏராளமான குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பழுதடைந்து கண்டமாகிவிட்டது. இந்த வாகங்களை எப்சி பார்த்து 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பயன்படுத்தியாகிவிட்டது.

குப்பைகளை எடுத்து செல்லும் ‘காம்பக்டர்’ வாகனங்கள் அதிகமாக வாங்கினால் ஒரே நேரத்தில் அதிக குப்பைகளை எடுத்து செல்லலாம். பெட்ரோல் செலவினத்தை கட்டுப்படுத்தலாம். நகரில் குப்பை தேங்குவதற்கு ‘காம்பாக்ட்ர்’, ‘டம்பர் பிளேசர்’ போன்ற வாகனங்கள் பற்றாக்குறைதான்,” என்றனர். மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”கூடுதலாக 2 காம்பக்டர் வாகனங்கள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுகாதாரத் துறையிலும் பணியாளர்களை வேலை வாங்க முடியவில்லை. அவர்களும் பொறுப்பை உணர்ந்து பணிபுரிந்தால் நகர் தூய்மையாக இருக்கும்” என்றார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *