மதுரை: இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி மதுரை மாவட்ட எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகளும் கண்காணித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதியில் இருந்தும் சமுதாய அமைப்பினர் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் பரமக்குடிக்கு வாகனங்களில் சென்று மரியாதை செலுத்தினர். மதுரை நகர், மாவட்டத்திலும் பல இடங்களில இமானுவேலுவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தென்மாவட்டம், மேற்கு மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக ஏராளமான வாகனங்கள் பரமக்குடிக்கு சென்றதால் மதுரை நகர், புறநகர் பகுதியிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை நகர், மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சோதனைச்சாவடிகளில் நினைவிடத் திற்கு செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்டது தவிர, அதிக வாகனங்களில் செலுதல் போன்ற விதிமீறல்களை தடுக்கும் வகையில் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டன. தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், டிஐஜி ரம்யா பாரதி, மதுரை எஸ்பி சிவபிரசாத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து ரோந்து சென்று பாதுகாப்புப் பணியை கண்காணித்து சீரமைத்தனர்.