புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சிகள், மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ இன்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வக்ஃப் வாரியங்களில் பெண்களைக் கட்டாயமாகச் சேர்ப்பது உட்பட பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். வக்ஃப் சொத்துக்கள் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மசோதா தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால், “இந்த மசோதா கூட்டாட்சி முறை மீதான வலிமையான தாக்குதல். வக்ஃப் சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகளை மாநிலங்கள் கவனித்துக் கொள்கின்றன. இந்த மசோதா அனைத்து தரவுகள் சேகரிக்கும் பணியையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும். இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த மசோதா தொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி மொஹிபுல்லா, “மற்ற மதத்தினரின் சட்டப்பூர்வ அமைப்புகளில் அந்தந்த மதத்தினர் மட்டுமே பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் எனும்போது, ஏன் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது. முதல் வக்ஃபு வாரியம் மெக்காவில் உள்ளது. அது குறித்தும் கேள்வி எழுப்புவோமா? இது ஒரு பெரிய தவறு. இதற்கான விலையை நாம் பல நூற்றாண்டுகளுக்கு கொடுக்க வேண்டி இருக்கும்” என தெரிவித்தார்.
இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமல்ல, கூட்டாட்சி மற்றும் மத சிறுபான்மையினருக்கும் எதிரானது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். ஒரு இந்து கோயிலை நிர்வகிக்கும் வாரியத்தில் இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அங்கம் வகிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஒரு குறிப்பிட்ட மதத்தை நம்பாத ஒருவருக்கு அந்த மதத்தின் சார்பாக முடிவெடுக்க ஏன் உரிமை இருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் லாலன் சிங், “வழிபாட்டுத் தலங்களுக்கும் சட்டபூர்வ அமைப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த அவையில் உள்ளவர்கள் வக்ஃப் வாரியங்களை கோயில்களுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், அவை வேறுபட்டவை. இது மசூதிகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி அல்ல. வக்ஃப் வாரியங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அமைப்புகள். இந்தத் திருத்தம் அதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.
மசோதா தொடர்பாக பேசிய மகாராஷ்டிர எம்பி சுப்ரியா சுலே, “வருத்தம் என்னவென்றால் இந்த மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தின் மூலமாக அறியவில்லை. ஊடகங்கள் மூலமாகவே அறிந்துகொண்டோம். இது அரசாங்கத்தின் புதிய வழியா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். நாங்கள் எங்கள் வேலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு மசோதாக்களை கசியவிடுவதற்கு முன் தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்றார்.
இதனை மறுத்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த மசோதா நாடாளுமன்றத்தில்தான் பகிரப்பட்டது என்றார். ஆனால், சுப்ரியா சுலே, நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஊடகங்களில் வெளிவந்துவிட்டது என குறிப்பிட்டார். சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், இந்த மசோதா அனைத்து எம்.பி.க்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு இந்த சபைக்கு தகுதி இல்லை என்று எம்பி அசாதுதீன் ஒவைசி கூறினார். இது அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 25 ஆகியவற்றின் கொள்கைகளை மீறுவதாகக் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“ஒரு சொத்தை வக்ஃப் நிர்வகித்தல் என்பது முஸ்லிம்களுக்கு இன்றியமையாத மத நடைமுறையாகும். அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை மறுப்பதன் மூலம் முஸ்லிம்கள் தங்கள் வக்ஃப் சொத்துகளை எவ்வாறு நிர்வகிப்பது? அரசாங்கம் கடுமையாகக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளது. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி. அதற்கு இந்த மசோதா ஆதாரம்” என்று கடுமையாக அசாதுதீன் ஒவைசி எதிர்த்தார்.