
மகளிர் உரிமை தொகை திட்டத்தை சொல்லிதான் திமுக வெற்றி பெற்றது. எனவே, 2 ஆண்டு பாக்கியையும் பெண்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித் தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் நேற்று பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி ஆயுஷ் ஹோமம் மற்றும் கோ பூஜை, கோ தான விழா நடைபெற்றது.
நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனரும், பாஜக மாநில செயலாளருமான வினோஜ் பி.செல்வம் தலைமையில்நடந்த இந்நிகழ்ச்சியில் தெலங்கானாஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் புருஷோத்தமன் ரூபாலா, மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், வி.கே.சிங், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உட்படபலர் பூஜையில் கலந்து கொண்ட னர். பின்னர், செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
பிரதமர் தனது பிறந்தநாளன்று, தொழிலாளர் அனைவரும் பயன்பெறும் வகையில் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்குகிறார். ஆனால், இங்கு விஸ்வகர்மா திட்டம் தவறாகமுன்னிறுத்தப்படுகிறது. குலத்தொழிலை பிரதமர் ஊக்கப்படுத்து வதாக கூறுகின்றனர். ஆனால், இதுஎல்லா குலத்தொழில் செய்து வருபவர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம். எனவேதான், பாரம்பரிய தொழில்கள் அழிந்து விடாமல் மேம்படுத்துவதற்கு இத்திட்டம் வாயிலாக பிரதமர் நிதி வழங்குகிறார். எதிர்க்க வேண்டுமே என்பதற்காக எல்லா திட்டங்களையும் எதிர்க்கக்கூடாது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால், அது தகுதியானவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மகளிர் உரிமை தொகை திட்டத்தை வைத்துதான் திமுக வெற்றி பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. எனவே, 2 ஆண்டு பாக்கியையும் பெண்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜகவில் இணைய சொல்லி அமலாக்கத்துறை வற்புறுத்தியதாக சொல்வது நம்பும்படியாக இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.