National

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவால் யாருக்கு லாபம்?- ஓர் அலசல் | Who could be the real beneficiary of Women’s Reservation Bill?

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவால் யாருக்கு லாபம்?- ஓர் அலசல் | Who could be the real beneficiary of Women’s Reservation Bill?
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவால் யாருக்கு லாபம்?- ஓர் அலசல் | Who could be the real beneficiary of Women’s Reservation Bill?


புதுடெல்லி: கடந்த 2014-ல் பிரதமர் பதவியில் நரேந்திர மோடி அமர்ந்தது முதல் அதிரடியாகப் பல வியூகங்களை அமலாக்கி வருகிறார். பணமதிப்பு நீக்கம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியரசுத் தலைவராக பழங்குடி சமூகத்தின் பெண் எனப் பலதும் இடம் பெற்றுள்ளன. இவற்றை பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களால், சிறிதும் கணிக்க முடியவில்லை.

இப்பட்டியலில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முதல் மசோதாவாக 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு (நாரிசக்தி வந்தன் பில்) நேற்று அறிமுகமாகி உள்ளது. இதன் பலன் பாஜகவுக்கு கிடைக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் சுமார் 140 கோடி மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும், தேர்தல் சமயங்களில் வாக்களிப்பதில் ஆண்களை விட பெண்கள் முன்னணி வகிப்பது உண்டு. பெரும்பாலும் பெண்கள் வாக்களிக்கும் அரசியல் கட்சிகளுக்கே வெற்றி எனும் நிலையும் உள்ளது.

இதற்காக சமீப காலமாக அரசியல் கட்சிகள் பெண்களுக்கானப் பல திட்டங்களை தேர்தல் அறிவிப்பாக அளிக்கின்றனர். இதற்கு பெண்கள் தமது வாக்களிக்கும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவது காரணம் எனக் கருதப்படுகிறது. பெண்கள் மீதானப் புள்ளிவிவரங்களை பல ஆண்டுகளாக பாஜக கணக்கிட்டு வந்தது.

இதன் அடிப்படையில், மகளிர் மசோதாவை 2024 மக்களவை தேர்தலுக்கான வெற்றிக்கானத் தனது துருப்புச் சீட்டாக வைத்திருந்தது. இதை கணித்து பாஜக தன் வெற்றிக்கான கடைசிகட்ட அரசியல் ஆயுதமாக்கும் என கடந்த ஜனவரி 22 இல் வெளியான இந்து தமிழ் திசையின் ‘புதிய நாடாளுமன்ற அம்சங்கள்’சிறப்பு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காங்கிரஸ் அறிமுகப்படுத்தி அமலாக்க முடியாமல் போன பல திட்டங்களை பாஜக கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளது. இந்தவகையில், மகளிர் மசோதாவுக்காக முன்னெடுத்த காங்கிரஸால், பஞ்சாயத்துக்களில் மட்டுமே 1992 இல் அமலாக்க முடிந்தது.

சுமார் 27 வருடங்களுக்கு முன் தேவகவுடா பிரதமராக இருந்தபோது, மகளிருக்கான 33 சதவீத ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சில எம்.பி.க்களை அவைக்கு வெளியே தூக்கி போடவேண்டிய நிலையும் இருந்தது.

இந்த மசோதாவுக்கு, திமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகளும் ஆதரவளித்திருந்தன. ஆனால், காங்கிரஸின் கூட்டணியான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதியின் முலாயம்சிங் யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் நிதிஷ்குமார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இவர்கள், 33 சதவீத ஒதுக்கீட்டுக்கு முன்பாக அதில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்தினர். இதனால், கிடப்புக்குப் போன மகளிர் மசோதாவை பாஜக தூசி தட்டி எடுத்துள்ளது. இதன் பலனை 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

ஏனெனில், முன்கூட்டியே திட்டமிட்ட பாஜக தனது கட்சியின் பல அணிகளில் மகளிர் பிரிவுகளை சமீப காலமாக பலப்படுத்தி வருகிறது. இவற்றில் பல முக்கியப் பெண் தலைவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய அரசியல் பயிற்சிகளையும் பாஜக அளித்து வருகிறது. இதர கட்சிகளின் மகளிர் பிரிவுகள், பாஜக அளவுக்கு உறுதியாக உள்ளதா? எனத் தெரியவில்லை.

2019 மக்களவை தேர்தலிலும் பாஜகவின் முக்கியக் குறியில் பெண் வாக்காளர்கள் இருந்தனர். கடந்த முறை, தேர்தலுக்கு சற்றுமுன் முத்தலாக் தடை சட்டம் அமலால் இஸ்லாமியப் பெண்கள் பாஜகவுக்கு வாக்களித்திருந்தனர். இதன் தாக்கம், மற்ற மதத்தின் பெண்களிடமும் இருந்தது.

இந்நிலையில், மீண்டும் பாஜக பெண்களைக் குறி வைத்து 2024 தேர்தலிலும் வியூகம் அமைத்துள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் 78 பெண்கள் வெற்றி பெற்றனர். மொத்தம் 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் இந்த எண்ணிக்கை சுமார் 14 சதவீதம். மாநிலங்களவையிலும் பெண்களின் எண்ணிக்கை 13 சதவீதம் மட்டுமே.

மேலும், இந்த எண்ணிக்கை இதுவரையிலும் மக்களவையில் இல்லாத அளவில் அதிகமானது. பெண் எம்பி.,க்களாக 2014 இல் 64, 2009 இல் 52 எனக் குறைந்திருந்தன. பெண் வேட்பாளர்களாக 2019 இல் பாஜகவில் 53, காங்கிரஸில் 54 இடம் பெற்றிருந்தனர். உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் தலா 11 பெண்கள் பாஜக எம்.பி.க்களாகினர்.

இதர கட்சிகளில், அதன் பிரிவுகளிலும், நிர்வாக அரசியலிலும் முக்கியப் பங்கை பெண்களுக்கு அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. குறுகிய காலத்திலும் தம் பெண் வேட்பாளர்களை இதர கட்சிகளால் தேர்வு செய்வது கடினம். எனவே, பெண்களுக்கான ஒதுக்கீடு அமலானால் அதன் பலன், முக்கியக் கட்சிகளான பாஜகவுடன், காங்கிரஸுக்கும் கிடைக்கும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளிலும் பெண் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இது, மாநிலங்கள் மற்றும் பிராந்தியக் கட்சிகளில் பெண்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. பெண் சமஉரிமை பேசும் இக்கட்சிகள் அதை தம் நிர்வாகத்தில் அமலாக்க முன்வருவதில்லை.

இமாச்சலப்பிரதேசம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர், மேகாலயா, ஒடிஸா, சிக்கிம், ஆந்திரப்பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், அசாம், கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், மகராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்டவைகளிலும் பெண்கள் எண்ணிக்கை 10 சதவிகிதம் கூட இல்லை.

2022 இன் அரசு புள்ளிவிவரப்படி பிஹார், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் பெண் எம்எல்ஏக்கள் 10 முதல் 12 சதவிகிதமாக உள்ளனர். அதேசமயம், சத்தீஸ்கர் 14.44, ஜார்கண்ட் 13.7 மற்றும் மேற்குவங்க மாநில சட்டப்பேரவைகளில் 12.35 சதவிகிதத்தில் பெண்கள் வகிக்கின்றனர்.

மீண்டும் மகளிர் ஒதுக்கீடு மசோதா மீதானப் பேச்சு துவங்கியதும் காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கியக் கட்சிகள் அதற்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். 33 சதவீத ஒதுக்கீடு முறையாக அமலானால், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளிலும் தாம் பெரும் முக்கியத்துவம் பெண்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *