
புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அரசு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில், முதல் நிகழ்வாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் இந்த மசோதாவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, புதிய நாடாளுமன்ற மக்களவையில் தனது முதல் உரையை பிரதமர் மோடி ஆற்றினார். அப்போது பேசிய அவர், “புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புதிய நவீன இந்தியாவை பறைசாற்றுகிறது. இது நமது பொறியாளர்களும் பணியாளர்களும் உருவாக்கித் தந்தது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்கிறேன். அமிர்த காலத்தின் புதிய விடியலின் தொடக்கமாக இந்த நாடாளுமன்றம் விளங்குகிறது.
இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து முன்னேறி வருகிறது. அறிவியல் துறையில் நிலவை ஆய்வு செய்வதற்காக நாம் அனுப்பிய சந்திரயான்-3 வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் வெற்றி சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மிகப் பெரிய புகழை ஈட்டித் தந்திருக்கிறது. இவை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
புதிய நாடாளுமன்றம் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது. இது ஒரு தனிச்சிறப்பு மிக்க வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இன்று விநாயகர் சதுர்த்தி நன்னாள். வளத்திற்கும், புனிதத்திற்கும், நல்லறிவுக்குமான கடவுளாக விநாயகர் கருதப்படுகிறார். புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்துடனும் சக்தியுடனும் நாம் நமது இந்த புதிய பயணத்தைத் தொடங்க உறுதியேற்போம். சுதந்திரப் போராட்டத்திற்கான ஒரு வழியாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பாலகங்காதர திலகர் நாடு முழுவதும் ஏற்படுத்தினார். அதே உணர்வுடன் நாம் தற்போது பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
அதோடு, இன்றைய தினம் என்பது மன்னித்தலுக்கான நாள். தெரிந்தோ தெரியாமலோ யாரேனும் யாருக்கேனும் தீங்கிழைத்திருந்தால் அதனை மன்னிப்பதற்கான நாள் இது. இந்த நாளில், கடந்த கால கசப்புகளை மறந்துவிட்டு முன்னோக்கிப் பயணிக்க நாம் முயல வேண்டும்.
புதிய நாடாளுமன்றத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததற்கான முதல் ஒளிக்கான சாட்சியாக இந்தப் புனித செங்கோல் உள்ளது. இது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கை பட்ட செங்கோல். நமது முக்கியமான கடந்த காலத்துடன் செங்கோல் நம்மை இணைக்கிறது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டும் பணியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரின் பெயரும் ஷ்ரமிக்ஸ் என்ற டிஜிட்டல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற கட்டிடம் தற்போது மாறி உள்ளது. நமது மனநிலையும் மாற வேண்டும். நாட்டிற்குச் சேவை செய்வதற்கான மிக உயர்ந்த அமைப்பு நாடாளுமன்றம். இது அரசியல் கட்சிகள் பலனடைவதற்கான இடம் அல்ல. நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான இடம். அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்கள், சிந்தனைகள், செயல்களை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் செயல்பாட்டையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பொது விஷயங்களில் கூட்டாக முடிவு எடுக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக நாம் இருந்தாலும் நமது இலக்கு ஒன்றுதான். நாடாளுமன்ற பாரம்பரியத்தைக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க அனைவரும் முன்வர வேண்டும்.
சமூகத்தில் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். பெண்கள் விண்வெளித் துறை முதல் விளையாட்டுத் துறை வரை அனைத்திலும் சாதித்து வருகிறார்கள். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை ஜி20 மாநாட்டின்போதும் நான் வலியுறுத்தினேன். இந்த திசையில் அரசின் செயல்பாடு மிகவும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். ஜன்தன் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ள 50 கோடிக்கும் மேலானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தான். இதேபோல், முத்ரா திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா ஆகியவற்றின் மூலமும் பெண்கள் அதிக அளவில் பயனடைந்திருக்கிறார்கள். எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிப் பயணமும் வரலாற்றில் இடம் பெறும். தற்போது இந்தியாவுக்கான நேரம். நமது நாட்டின் வளர்ச்சிப் பயணம் வரலாற்றில் இடம் பெறும்.
சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா முதல் முறையாக 1996-ல் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா பலமுறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், போதிய எண்ணிக்கை பலம் இல்லாததால் அந்த மசோதாக்கள் நிறைவேறவில்லை. இந்த வேலையை செய்து முடிக்க கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என நான் நம்புகிறேன். இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. செப்டம்பர் 19, 2023 எனும் இந்த நாள் வரலாற்றில் மிக முக்கிய நாளாக இடம் பெறப்போகிறது.
பெண்களின் பங்களிப்பு ஒவ்வொரு துறையிலும் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். அரசியல் சாசன திருத்தத்தைக் கோரும் ஒரு மசோதாவை எங்கள் அரசு இன்று தாக்கல் செய்திருக்கிறது. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம். நாரிசக்தி வந்தன் அபிநியம் எனும் இந்த மசோதா நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும். இதற்காக, நமது தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மசோதா நிச்சயம் சட்டமாக மாறும் என்ற உறுதியை நான் நமது அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கும் அளிக்க விரும்புகிறேன். அதேபோல், இந்த அவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் இந்த மசோதா சட்டமாக ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இரண்டு அவைகளிலும் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.