
மதுரை: அரசியல் கட்சிகளை மிரட்டும் வகையில் மதுரையில் பாஜக வெளியிட்டுள்ள சுவரொட்டிக்கு மதுரை மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பாஜக சார்பில் ஒட்டியுள்ள சுவரொட்டியில், ‘ஒரு அளவுக்குமேல் நம்மகிட்ட பேச்சே கிடையாது; வீச்சுதான்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இதில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை, ஜனநாயக சக்திகளை மிரட்டும், அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரையில் பாஜகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டியில் பிரதமர் படம், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியல் தளத்தில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை முன்னிறுத்துவதற்காக மதுரை மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையும், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் வகையில் இது உள்ளது. மத்திய பாஜக அரசின், மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை, ஜனநாயக சக்திகளை மிரட்டும், அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதனை பாஜக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாநில செயலாளர் ஆர்.விஷ்ணு பிரசாத் வெளியிட்டுள்ளார்.
இதனை வெளியிட்டவர்கள் மீது மாநகர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பாஜக தலைமை வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும் இத்தகைய வன்முறையாளர்களை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தி ஜனநாயகத்தை காக்க மதுரை மக்கள் முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.