10/09/2024
National

பெண்கள் பாதுகாப்பு: சரிமாரியாக கேள்விகளை அடுக்கி மோடி அரசு மீது கார்கே சாடல் | Mallikarjun Kharge slams Modi government over issue of women’s safety

பெண்கள் பாதுகாப்பு: சரிமாரியாக கேள்விகளை அடுக்கி மோடி அரசு மீது கார்கே சாடல் | Mallikarjun Kharge slams Modi government over issue of women’s safety


புதுடெல்லி: “பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் உறுதியான எதையும் செய்யவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். “சமூக மாற்றம் என்பது சுவர்களில் ‘மகள்களைக் காப்போம்’ என்று ஓவியம் வரைவதால் வருமா அல்லது அரசு சட்டம் – ஒழுங்கை திறமையாக கையாள்வதால் வருமா?” என்று அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம் பெண்களுக்கு இழைக்கப்படும் எந்த அநீதியும் சகிக்க முடியாதது, வேதனையானது, மிகவும் கண்டிக்கத்தக்கது. ‘மகள்களைக் காப்போம்’ என்ற மத்திய அரசின் பிரச்சாரம் நமக்குத் தேவையில்லை. மாறாக, ‘மகள்களுக்கு சம உரிமையை உறுதி செய்வோம்’ என்பதுதான் தேவை. பெண்களுக்கு தேவை பாதுகாப்பு அல்ல; மாறாக அச்சமில்லா சூழல்தான்.

நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்துக்கு 43 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நம் நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தலித் – பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் 22 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அச்சம், மிரட்டல், சமூகக் காரணங்களால் பதிவாகாமல் போகும் குற்றங்கள் ஏராளம் உள்ளன.

பிரதமர் மோடி, செங்கோட்டையில் தனது உரைகளில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பலமுறை பேசி உள்ளார். ஆனால், அவரது அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடந்த 10 ஆண்டுகளில் உறுதியான எதையும் செய்யவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வெட்கக்கேடான செயலை அவரது கட்சி பலமுறை செய்துள்ளது. சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு சுவரிலும் ‘மகள்களைக் காப்போம்’ என்று ஓவியம் வரைவதால் வருமா அல்லது அரசு சட்டம் – ஒழுங்கை திறமையாக கையாள்வதால் வருமா?

தடுப்பு நடவடிக்கைகளை நம்மால் எடுக்க முடியுமா? நமது குற்றவியல் நீதி அமைப்பு மேம்பட்டுள்ளதா? சமூகத்தில் சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் இப்போது பாதுகாப்பான சூழலில் வாழ முடிகிறதா? இத்தகைய சம்பவங்களை அரசும் நிர்வாகமும் மறைக்க முயற்சிக்கவில்லையா? உண்மை வெளியே வரக்கூடாது என்பதற்காக, உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை வலுக்கட்டாயமாக செய்வதை காவல்துறை நிறுத்திவிட்டதா?

2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட, பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டத்தின் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதால், பணியிடத்தில் நமது பெண்களுக்கு அச்சமில்லாத சூழலை உருவாக்க முடியுமா?

அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு சம அந்தஸ்தை வழங்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தீவிரமான பிரச்சினை. இந்த குற்றங்களை தடுப்பது நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடனும் இணைந்து நாம் இதற்கு தீர்வு காண வேண்டும்.

பாலின விழிப்புணர்வு பாடத்திட்டம், பாலின பட்ஜெட், பெண்கள் உதவி மையங்கள், நகரங்களில் தெரு விளக்குகள், பெண்களுக்கான கழிப்பறைகள், காவல் துறை சீர்திருத்தங்கள், நீதித்துறை சீர்திருத்தங்கள் என்று பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவற்றின்மூலம், அச்சமில்லாத சூழலை உறுதி செய்ய முடியும்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *