National

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி | Need swift justice: PM Modi on crimes against women amid Kolkata rape-murder case

“பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி | Need swift justice: PM Modi on crimes against women amid Kolkata rape-murder case


புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் எவ்வளவு விரைவாக முடிவுகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பாதி மக்களுக்குப் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட் ரமணி, உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல், இந்திய பார் கவுன்சில் தலைவர் பாய் மனன் குமார் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டு பயணத்தை நினைவு கூறும் வகையில் இன்று (ஆக. 31) மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாடு நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகள், இது ஒரு நிறுவனத்தின் பயணம் அல்ல. இது இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களின் பயணம். ஜனநாயக நாடாக இந்தியா முதிர்ச்சி அடையும் பயணம் இது. இந்தப் பயணத்தில், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மற்றும் நீதித்துறை நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ள கோடிக்கணக்கான நாட்டு மக்களின் பங்களிப்பும் இதற்கு உண்டு.

உச்ச நீதிமன்றத்தின் இந்த 75 ஆண்டுகாலம், ஜனநாயகத்தின் தாய் என்ற இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்துகிறது. வாய்மையே வெல்லும் என்ற நமது கலாச்சார முழக்கத்திற்கு இது வலு சேர்க்கிறது. நமது ஜனநாயகத்தில், அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக நீதித்துறை கருதப்படுகிறது. இதுவே ஒரு பெரிய பொறுப்பு. உச்ச நீதிமன்றமும், நமது நீதித்துறையும் இந்தப் பொறுப்பை சிறப்பாகச் செய்ய முயற்சித்துள்ளன என்பதை திருப்தியுடன் கூறலாம்.

சுதந்திரத்திற்குப் பிறகு, எமர்ஜென்சி போன்ற இருண்ட காலங்களிலும் நீதியின் உணர்வை நீதித்துறை பாதுகாத்தது. அப்போது அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கியப் பங்காற்றியது. அடிப்படை உரிமைகள் தாக்கப்பட்டபோது, ​​உச்ச நீதிமன்றம் அவற்றைப் பாதுகாத்தது. அதுமட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்த போதெல்லாம், தேச நலனை முதன்மையாக வைத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டை நீதித்துறை பாதுகாத்துள்ளது.

சுதந்திரத்தின் பொற்காலத்தில், 140 கோடி நாட்டு மக்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு கனவு – வளர்ந்த இந்தியா, புதிய இந்தியா என்பதை நாம் அனைவரும் அறிவோம். புதிய இந்தியா என்பது சிந்தனையும் உறுதியும் கொண்ட நவீன இந்தியா. நமது நீதித்துறை, இந்த கண்ணோட்டத்தின் வலுவான தூண். குறிப்பாக, நமது மாவட்ட நீதித்துறை. மாவட்ட நீதித்துறை இந்திய நீதித்துறையின் அடித்தளமாக உள்ளது. நாட்டின் பொதுக் குடிமகன் நீதிக்காக முதலில் மாவட்ட நீதித்துறையின் கதவைத்தான் தட்டுகிறான். எனவே, இது நீதியின் முதல் மையம், இது முதல் படி. நீதித்துறை எல்லா வகையிலும் திறமையாகவும் நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நாட்டின் முன்னுரிமை.

இன்று மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 4.5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நீதி தாமதத்திற்கு முடிவு கட்ட, கடந்த பத்தாண்டுகளில் பல நிலைகளில் பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நாடு சுமார் ரூ. 8 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் நீதித்துறை உள்கட்டமைப்புக்காக செலவிடப்பட்ட தொகையில் 75 சதவீதம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

சட்ட நிபுணர்களுடன் நான் பேசும்போதெல்லாம், இ-கோர்ட்டுகள் குறித்து விவாதிப்பது மிகவும் இயல்பானது. தொழில்நுட்பத்தின் இந்த தலையீடு நீதித்துறை செயல்முறைகளை விரைவுபடுத்துகிறது; வழக்கறிஞர்கள் முதல் புகார்தாரர்கள் வரை அனைவரின் பிரச்சினைகளையும் குறைக்கிறது. இன்று நாட்டில் நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், உச்ச நீதிமன்றத்தின் இ-கமிட்டி இந்த முயற்சிகள் அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீதித்துறையின் பெரிய மாற்றங்களில், விதிகள், கொள்கைகள் மற்றும் நோக்கங்களும் பங்கு வகிக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, முதன்முறையாக, நமது சட்ட கட்டமைப்பில் இத்தகைய பெரிய மற்றும் முக்கியமான மாற்றங்களை நாடு செய்துள்ளது. இந்திய நீதித்துறை சட்டத்தின் வடிவத்தில் புதிய இந்திய நீதித்துறை அரசியலமைப்பை நாம் பெற்றுள்ளோம். இந்தச் சட்டங்களின் உள்நோக்கம் – ‘குடிமகன் முதலில், கண்ணியம் முதலில் மற்றும் நீதி முதலில்’.

நமது குற்றவியல் சட்டங்கள் காலனித்துவ சிந்தனையிலிருந்து விடுபட்டுள்ளன. தேசத்துரேகம் போன்ற ஆங்கிலச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக, சிறிய குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மின்னணு மற்றும் டிஜிட்டல் பதிவுகளும் இந்திய சாட்சியச் சட்டத்தின் கீழ் ஆதாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்திய தற்காப்புச் சட்டத்தின் கீழ், மின்னணு முறையில் சம்மன் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதித்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் சுமை குறையும்.

நாட்டின் மற்றும் சமூகத்தின் பற்றி எரியும் பிரச்சினையை உங்கள் முன் எழுப்ப விரும்புகிறேன். இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சமூகத்தின் தீவிர கவலையாக உள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக நாட்டில் பல கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் எவ்வளவு விரைவாக முடிவுகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பாதி மக்களுக்குப் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் கிடைக்கும்” என தெரிவித்தார்.





Source link

W2L
About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *