கோவை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘போஷன் அபியான்’ ஊட்டச்சத்து கண்காட்சி இன்று (திங்கள்கிழமை) நடந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது: வால்பாறை கல்லூரி பாலியல் குற்றம் தொடர்பான புகாரில் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு, அரசு சார்பில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சி கோவையில் இன்று நடத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதுடன் பெறப்படும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. காவல்துறை சார்பில் நகரப் பகுதிகளில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தின் மூலமும் கிராம பகுதிகளில் ‘பள்ளிக்கூடம்’ திட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காவல்துறை சார்பில், அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் தொடர்பாக மத்திய அரசின் ‘பாதுகாப்பான நகரம் நிர்பயா’ திட்டத்தின் கீ்ழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று ஆட்சியர் கூறினார்.