புதுச்சேரி: ரேஷன் கடைகள் மூலமாக வெள்ளை அரிசி விநியோகிக்கப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 8) பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, “ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் புதுச்சேரி வளர்ச்சிக்கான திட்டங்கள், நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை எடுக்கப்பட்டுள்ளது. வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களுக்கான நலத்திட்டங்களில் புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டும், செய்யும் நலத்திட்டங்களை உயர்த்தி வழங்க வேண்டும் என எம்எல்ஏ-க்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
மக்களுக்கான நலத்திட்டங்களை எந்த நிலையிலும் குறைக்க முடியாது என்பது உண்மை. அதேநேரத்தில் மூலதன செலவினங்களை அதிகரிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் சிறந்த வளர்ச்சி பெற மாநில அந்தஸ்து அவசியம். அதைப் பெற வேண்டும் என்பது அனைவருடைய எண்ணமாக இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. நம்முடைய நிர்வாகத்தில் விரைவான செயல்பாடு, வளர்ச்சி இருக்க வேண்டும். கோப்புகள் விரைவாக வந்து முடிக்கப்பட வேண்டும் என்றால் மாநில அந்தஸ்து மிகவும் அவசியம்.
நமது பெரும் முயற்சியின் காரணமாக நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம். சில குறைகள் இதில் உள்ளது. இங்கு பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. அவற்றை செயல்படுத்த வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். ஒரு சில நிறுவனங்களை நாம் தூக்கி நிறுத்தியுள்ளோம். சில நிறுவனங்களை சீர்தூக்கி நிறுத்த முடியவில்லை. அவை மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. மூடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சில சலுகைகளை தனியார் நிறுவனங்கள் எதிர்பார்கிறார்கள். அதனை அரசு பரிசீலிக்கிறது. ஐ.டி பார்க் வர வேண்டும் என்பது அரசின் எண்ணம். இதுதொடர்பாக ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களுக்கு துறை அமைச்சர் சென்று நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசி வருகிறார். இங்கு ஐடி பார்க் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு சென்றுவிட்டது. புதுச்சேரியில் நிறுவனங்கள் அமைக்க அனுமதி விரைவாக கிடைக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. தமிழகத்தில் அனுமதி விரைவாக கிடைக்கிறது.
அந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க அதிக நிதி ஒதுக்குகிறோம். சென்டாக் மூலமாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கு நிலுவை உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அரசுப் பள்ளியில் படித்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை இந்த ஆண்டே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உதவித்தொகை கொடுப்பது குறித்து கவனத்தில கொள்ளப்படும்.
உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. எம்எல்ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி முழுமையாக செலவிடப்படுகிறது. நல்ல சாலைகள், குடிதண்ணீர் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கச் சொல்லியுள்ளோம். அந்த திட்டத்தை விரைவாக செயல் படுத்துவோம். விளையாட்டு துறைக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனி இயக்குநர் நியமிக்கப்பட உள்ளார். வில்லியனூரை அழகான நகரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வில்லியனூர் ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றப்படும். அதற்காக கடந்த ஆண்டை விட கூடுதலாக செலவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநில அந்தஸ்து பெறுவதில் முழு கவனம் செலுத்துவோம். ரேஷன் கடை மூலமாக வெள்ளை அரிசி கண்டிப்பாக போடப்படும். புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் (கான்பெட்) மூலமாக பெற்று ரேஷன் கடைகள் மூலம் வெள்ளை அரிசி போடப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஒரு சில மாதங்களில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அந்தஸ்து பெறுவது குறித்து இந்தக் கூட்டத்தொடர் முடிவில் அரசு தீர்மானமாக போடப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.