Tourism

புதுச்சேரியில் இடிந்த பாலத்துக்கு பதிலாக அமைகிறது புதிய துறைமுகப் பாலம்! | New Harbor Bridge is being Built to Replace the Collapsed Bridge on Puducherry!

புதுச்சேரியில் இடிந்த பாலத்துக்கு பதிலாக அமைகிறது புதிய துறைமுகப் பாலம்! | New Harbor Bridge is being Built to Replace the Collapsed Bridge on Puducherry!


புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் தற்போது காந்தி பீடம் அமைந்துள்ள இடத்தில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் துறைமுகம் செயல்பட்டது. இதற்காக பாலம் கட்டப்பட்டிருந்தது.

புதுச்சேரியின் கடற்கரையில் கடந்த 1861-ம்ஆண்டு கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. கடற்கரையில் இருந்து கடல் நோக்கி 192 மீட்டர் நீளத்துக்கு பாலம் அமைந்தது. 6 ஆண்டு பணிகள் நடந்தது. 1866-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கடல் பாலம் திறக்கப்பட்டது.1952-ல் வீசிய புயலில் புதுவை துறைமுகமும், கடல் பாலமும் முற்றிலும் மறைந்து போனது. தற்போது காந்தி சிலைக்கு பின்னே சிறு கம்பிகளாக கடல் பாலத்தின் சாட்சிகளாக அக்கால கம்பிகள் உள்ளன.

அது புயலால் சேதமடைந்து விழுந்ததால் சுதந்திரத்திற்கு பிறகு வம்பாகீரப்பாளையத்தில் இரண்டாவது முறையாக, துறைமுகம் கட்டும் பணி 23.11.1956-ல் தொடங்கியது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு 26.10.1962-ல் தற்போது உள்ள இப்பாலம் திறக்கப்பட்டது. அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ்பகதுார் திறந்து வைத்தார்.

அப்போது அதற்கான கட்டுமான தொகை 41 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய். சுதந்திரத்திற்கு பிறகு கட்டப்பட்ட புதுச்சேரி பழைய துறைமுக பாலம் சிதிலமடைந்ததால், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை துறைமுக துறை கைவிட்டது. பழைய துறைமுகத்தையும், அங்குள்ள பாலத்தையும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கண்டு களித்து வந்தனர்.

திரைப் படங்களும் படமாக்கப்பட்டன. குறிப்பாக ஹாலிவுட் படமான ‘லைப் ஆஃப் பை’, சூர்யாவின் ‘மவுனம் பேசியதே’, சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’, ‘எதிர்நீச்சல்’, விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’ மற்றும் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளன. இதற்காக துறைமுக பாலத்தில் பல லட்சத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

பாரம்பரியமிக்க பழைய துறைமுகம் பாலத்தின் மேற்பரப்பு ‘பளபளப்பாக’ இருந்தாலும் அடிப்பகுதி எலும்பு கூடு போன்று பலவீன மாகவே உள்ளது. பாலத்திற்காக கடலில் இறக்கப்பட்ட கான்கிரீட் தூண்கள் சேதமடைந் திருந்ததை அரசு அறிந்திருந்தது. பழைய பாலம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்ததால், இப்பகுதியில் மக்கள் நுழையத் தடையும் உள்ளது.

இருப்பினும் மிக முக்கியமான விஐபிகள் மட்டுமே காலை, இரவு நேரங்களில் இப்பாலத்தில் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 2022 மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்நிலையில் புதிய பாலம் இங்கு கட்டப்படவுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், “மத்திய துறை முகத் துறை முதலில் ரூ.19 கோடியில் பழைய பாலத்தை புதுப்பிக்க முடிவு எடுத்தது. ஆனால் இப்போது பழைய பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலத்தை கட்ட மத்திய துறைமுகத்துறை முடிவு எடுத்துள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

வருங்காலத்தில் பயணிகள் கப்பல் வருகை, சரக்கு கப்பல் வருகை உள்ளது. அதனால் இப்பகுதியில் பாலம் தேவைப்படுகிறது. அதற்காக புதிய பாலம் கட்டப்படவுள்ளது. முழு நிதியும் மத்திய அரசு தரவுள்ளது. அந்நிதி விவரம் திட்ட அறிக்கை தயாரிப்புக்கு பிறகு தெரியும்” என்று குறிப்பிட்டார்.





Source link

About Author

tamilnewspapper.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: