சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 313 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 100.4 ஓவர்களில் 327 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரித்திக் ஈஸ்வரன் 140 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 10 அதிகபட்ச ரன்கள் விளாசினார். முகமது 47 ரன்கள் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் தனய் தியாகராஜன் 7 விக்கெட் வீழ்த்தினார். 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதராபாத் அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 75 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ரோகித் ராயுடு 61, ஹிமா தேஜா 37 ரன்கள் சேர்த்தனர். ரவி தேஜா 33, சி.வி.மிலிந்த் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங், முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
திண்டுக்கலில் நடைபெற்று வரும் மற்றொரு அரை இறுதியில் சத்தீஸ்கர், டிஎன்சிஏ லெவன் அணிகள் விளையாடி வருகின்றன. இதன் 3-வது நாளான நேற்று சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்ஸில் 150.5 ஓவர்களில் 467 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டிஎன்சிஏ லெவன் அணி தரப்பில் லக்சய் ஜெய் 5, அஜித் ராம் 4 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ லெவன் 64.4 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அஜித் 39, நிதிஷ் ராஜகோபால் 34, மோகித் ஹரிகரன் 28 ரன்கள் சேர்த்தனர். சத்தீஸ்கர் அணி தரப்பில் ககன்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும் ஷசாங் திவாரி, முகமது இர்ஃபான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 273 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய சத்தீஸ்கர் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 27 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.