
புதுச்சேரி: பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் புதுச்சேரி விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எம்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உடனிருந்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் ஆறுதல் கூறினர். மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யவும் சிவா அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள படுகை அணை, ஏரி மற்றும் குளங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரியில் நீர் வழித்தடத் தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால், அவர்களுக்கான நிவாரணம் கிடைக்கவில்லை. காப்பீட்டு நிறுவனங்கள் பயன்பெரும் வகையில் மட்டுமே காப்பீட்டு திட்டம் உள்ளது.
பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் புதுச்சேரி விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால் பயிர் காப்பீடு திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள் மற்றும் மழை பாதிப்புகளுக்கான எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. எல்லாவற்றையும் பேசக்கூடிய புதுச்சேரி ஆளுநர் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.