சென்னை: “ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். அரசியல் நிலைப்பாடு, கொள்கைகளை கடந்து சினிமாவை நேசிக்க அதை படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை உணர்ந்து கொண்டாட சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும்” என ‘தங்கலான்’ படத்தை இயக்குநர் சேரன் புகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நேற்றுதான் தங்கலான் பார்க்க நேர்ந்தது. பா.ரஞ்சித், விக்ரம், இருவரின் அசுர உழைப்பும் அளவிடமுடியா திரை ஆற்றலும் காண முடிந்தது. ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். கதை சொன்ன விதமும் காட்சிபடுத்திய விதமும் அசரவைத்தது.
முதல்பாதி முழுவதும் ஆங்கிலப்படமாகவே இருந்தது. மண்ணின் உரிமையை இவ்வளவு சிறப்பாக எந்த படமும் சொல்லவில்லை. மொழியாடலில் இருந்த பழமை இன்னும் அழகு சேர்த்தது. விக்ரம் நம் தலைமுறை கொண்டாட வேண்டிய நபர். அந்த கதாபாத்திரத்துக்காக அவர் அவரை அர்ப்பணித்திருந்த விதம். சொல்ல வார்த்தைகள் இல்லை.. இணை என எவரைத்தேடினும் கிடைக்கவில்லை.
தம்பி ஜி.வி.பிரகாஷ் பெருமைப்படத்தக்க இசையால் இரைச்சலின்றி காட்சிகளை வியக்கவைத்ததை ரசித்தேன். திரைப்படத்தில் குறைகள் இருப்பினும் ரஞ்சித்தின் அரசியல் நிலைப்பாடை மனதில் கொள்ளாமல் (எனக்கில்லை) படைப்பு பேசிய அரசியலை கொண்டாடியே ஆகவேண்டும் அதுவே நாம் இந்த சினிமாவில் இருப்பதை அர்த்தமாக்கும்.
இரவுக்காட்சி முடிந்து நேரம் 1 மணி ஆனாலும் என் தொலைபேசியில் ரஞ்சித்தின் எண்ணை அழுத்தினேன்.. ஒருவரின் உழைப்பை பாராட்ட நேரமும் காலமும் காரணங்களும் பார்த்தால் அது பொய் என்பதால். சேதுவின் போதும் இரவுக்காட்சி பார்த்து நானும் பாலாவும் விக்ரமும் அதிகாலை 4 மணிவரை பேசியது நினைவு வந்தது. அரசியல் நிலைப்பாடு, கொள்கைகளை கடந்து சினிமாவை நேசிக்க அதை படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை உணர்ந்து கொண்டாட சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும்.. அது எவராயினும்.. ஏனெனில் படைப்பாளிகளின் நோக்கம் வென்று சமூகம் சமமாகும்போது நீயும் நானும் கைகோர்த்தே ஆகவேண்டும்” என தெரிவித்துள்ளார். இயக்குநர் சேரனுக்கு பா.ரஞ்சித் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
பெரும் மகிழ்சியும் நன்றியும் சார்a href=”https://twitter.com/directorcheran?ref_src=twsrc%5Etfw”>@directorcheran https://t.co/8hlUiQp2F1
— pa.ranjith (@beemji) August 30, 2024