
மும்பை: தேர்தல் நடத்தை விதிகள் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் தங்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளதாக சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இது குறித்து பேசிய உத்தவ் தாக்கரே, கடந்த 1987-ம் ஆண்டு பால் தாக்கரேவுக்கு நடந்த நிகழ்வு ஒன்றினைச் சுட்டிக் காட்டினார். அப்போது அவர் கூறுகையில், "அன்று ‘நாங்கள் இந்துகள் என்று சொல்வதில் பெருமை கொள்ளுங்கள்’, ‘கோயில்தான் கட்டுவோம்’ என்று கூறியதற்காக பால் தாக்கரேவின் ஓட்டுரிமை ஆறு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்றோ கர்நாடகா தேர்தலின்போது "வாக்களிக்கையில் ஜெய் பஜ்ரங்பலி எனக் கூறுங்கள்" என்று பிரதமர் மோடி கூறினார். இப்போது மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பாஜகவுக்கு நீங்கள் வாக்களித்தால் கட்டணம் இல்லாமல் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்" என்று கூறியிருக்கிறார்.