கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளுக்கு எதிராக வலுவான சட்டம் வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு பதில் இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு எழுதிய சமீபத்திய கடிதத்தின் நகலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அக்கடித்தில் அவர், “இதுபோன்ற (கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை) முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. என்றாலும், மத்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரிடமிருந்து பதில் வந்தது. எனது கடிதத்தில் கூறப்பட்டிருந்த பிரச்சினையின் தீவிரத்தை அவர் கவனிக்கவில்லை.
அதுபோன்ற பொதுவானதொரு பதிலில், விஷயத்தின் தீவிரத் தன்மை மற்றும் சமூகத்தில் அதன் தொடர்பு குறித்து போதுமான கவனம் கொடுக்கப்படவில்லை என நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூரணா தேவி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதியிருந்த கடிதத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தவறிய மாநில அரசின் தோல்வியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மேற்கு வங்க முதல்வர் தனது கடிதத்தில், “10 போக்சோ நீதிமன்றங்கள் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர மாநிலம் முழுவதும் 88 FTSCs (விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்) மற்றும் 62 போக்சோ நீதிமன்றங்கள் மாநில அரசின் நிதியில் செயல்படுகின்றன. வழக்குகள் கண்காணிப்பது தீர்த்து வைப்பது முழுக்க முழுக்க நீதிமன்றங்களின் கைகளிலேயே உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகள் மட்டுமே விரைவு சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்க வேண்டும். இதனிடையே, வழக்குகளின் தீவிரம் காரணமாக நிரந்தர நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு இந்த விவகாரத்தை பரிசீலிக்க வேண்டும். உங்களின் தலையீடு அவசியம்.
அவசரகால உதவி எண்களைப் பொறுத்தவரை, மாநிலம் முழுவதும் உதவி எண்கள் 112 மற்றும் 1098 திருப்திகரமாக செயல்படுகிறது. கூடுதலாக அவசரகால சூழ்நிலைகளில் 100 எண் பரவலாக பயன்படுத்தப்படுகிறது” என்று முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடும் சட்டம்: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆக.22-ம் தேதி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.