பாரிஸ்: பாராலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.
மகளிருக்கான எஸ்யு5 பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் மற்றொரு தமிழக வீராங்கனையான மனிஷா ராமதாஸ் உடன் பலப்பரீட்சை மேற்கொண்டார் துளசிமதி முருகேசன். இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் துளசிமதி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்கு 8-வது பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்த நிலையில், இன்று (செப்.02) எஸ்யு5 பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங் கியூ ஷியாவை எதிர்கொண்டார் துளசிமதி. இதில் 21-17, 21-10 என்ற புள்ளி கணக்கில் யாங் வெற்றிப் பெற்றார். இதன் மூலம் துளசிமதிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இன்னொருபுறம், வெண்கலத்துக்கான போட்டியில் மனிஷா ராமதாஸ் டென்மார்க் வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் 21 – 12, 21 – 8 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை உறுதி செய்தார்.
இதன் மூலம் பாராலிம்பிக் பட்டியலில் 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 22வது இடத்தில் இந்தியா உள்ளது.
யார் இந்த துளசிமதி? – காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி (24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயன்று வருகிறார். கை மாற்று பாதிக்கப்பட்டத்திறனாளியான இவர் பேட்மிண்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். தன் வீட்டுக்கு அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிறுவயதில் இருந்த இவருக்கு இவரது தந்தையே பயிற்சி அளித்தார். அரசு சார்பிலும் இவருக்கு விடுமுறை அளித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில், இவர் ஆசிய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் பிரிவில் வெற்றி பெற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றார்.