பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் நார்வால் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது.
பாராலிம்பிக்ஸ் தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டர் போட்டியில் இந்திய வீரர் மணிஷ் நர்வால் பங்கேற்றார். தொடக்கத்தில் இருந்து நிலையான புள்ளிகளை பெற்று வந்த மணிஷ், தென்கொரிய வீரர் ஜோ ஜியோங் டுவுக்கு சவாலாக திகழ்ந்தார். எனினும் இறுதியில் தென்கொரிய வீரர் ஆதிக்கம் செலுத்தி 237.4 புள்ளிகளுடன் முன்னேறி தங்கம் வென்றார். 234.9 புள்ளிகளுடன் இந்திய வீரர் மணிஷ் நார்வால் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 22 வயதான மணிஷ் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பதக்க விவரம்: பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரவில் இந்தியாவின் அவனி லேகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். தற்போது மணிஷ் நார்வால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆக 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 4 படங்கள் இந்தியாவுக்கு சொந்தமாகியுள்ளன. இப்போது, பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 9-ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.