
கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி அருகே உள்ளது புல்லாவெளி அருவி. திண்டுக்கல்லில் இருந்து 56 கி.மீ. தூரம், ஒட்டன்சத்திரத்திலிருந்து 40 கி.மீ. தூரம் பயணித்தால் தாண்டிக்குடியை அடையலாம்.
அங்கிருந்து 12 கி.மீ. தூரத்தில் புல்லாவெளி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்துக்கு அருகே வனப்பகுதியில் ஆபத்தான இடத்தில் புல்லாவெளி அருவி உள்ளது. ஆடலூர், பன்றிமலையில் பெய்யும் மழையானது புல்லாவெளியில் அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவியிலிருந்து செல்லும் தண்ணீர், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தைச் சென்றடைகிறது.
புல்லாவெளி அருவியிலிருந்து தண்ணீர் கொட்டும் அழகை, அருவியின் மேற்பரப்பிலிருந்து கண்டு ரசிக்க முடியும். ஆனால், அங்கு சென்று குளித்து மகிழ முடியாது. பல நூறு அடி கீழே அபாயகரமான பகுதியில் அமைந்துள்ள அருவியில் இறங்கிச் சென்று குளிப்பது என்பது வினையை விலை கொடுத்து வாங்குவது போன்றதாகும். இதனால், ஆபத்து நிறைந்த இப்பகுதிக்குச் சென்று குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தில் சிக்கும் இளைஞர்கள்: இருப்பினும், இளைஞர்கள் சிலர் தடையை மீறி அருவிக்குச் சென்று குளிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் ஆபத்தான முறையில் புகைப்படமும் எடுக்கின்றனர். இதுவரை புல்லாவெளி அருவியில் 14 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
ஆங்கிலேயரின் தொங்கு பாலம்: 100 ஆண்டுகளுக்கு முன்பு புல்லாவெளி அருவியைக் கண்டறிந்த ஆங்கிலேயர், அங்குசெல்ல மரத்தாலான தொங்கு பாலத்தை அமைத்தனர். இப்பாலத்தை இப்பகுதியினர் ஆடு பாலம் என்றும் அழைக் கின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால் ஆடு பாலம் தற் போது சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இயற்கைச் சூழல் நிறைந்த இப்பகுதி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விடுமுறை நாட்களில் இளைஞர்கள் அதிகளவில் குவிகின்றனர். ஆபத்தும், அழகும் நிறைந்த புல்லாவெளி அருவிப் பகுதியில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழவும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, புல்லாவெளி அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடையை மீறி சிலர் உள்ளே செல்கின்றனர். புல்லாவெளி அருவிப் பகுதி வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு, சுற்றுலா மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வருவாய்த் துறையின் ஒத்துழைப்பு அவசியம். அதே சமயம், வனத்துறையின் சூழல் சுற்றுலாத் திட்டத்தில் புல்லாவெளி அருவியையும் சேர்த்து சுற்றுலாத் தலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.