
ஈரோடு: பாஜக மாநில ஓபிசி அணி துணை தலைவரான ஆற்றல் அசோக்குமார், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.
பாஜக மாநில ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோருக்கான) அணியின் துணை தலைவராக, ஆற்றல் அசோக்குமார் பதவி வகித்து வந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சவுந்தரத்தின் மகனான அசோக்குமார், தற்போதைய மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார்.
சென்னை பசுமை வழிச் சாலை செவ்வந்தி இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் ஆற்றல் அசோக்குமார் தன்னை அதிமுக வில் இணைத்து கொண்டார்.
அதிமுக –பாஜக கூட்டணி சார்பில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பிய அசோக்குமார், தான் நிறுவனராக உள்ள ஆற்றல் அறக்கட்டளை மூலம், மருத்துவ சிகிச்சை, மலிவு விலை உணவகம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொண்டு வந்தார். அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் அவர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.