Sports

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு! | Shaheen Afridi Named Pakistan’s Captain In T20Is; Shan Masood To Lead In Tests

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு! | Shaheen Afridi Named Pakistan’s Captain In T20Is; Shan Masood To Lead In Tests


இஸ்லாமாபாத்: டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய கேப்டன்களாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், ஷான் மசூத்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர். டி20 அணிக்கான கேப்டனாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் அணிக்கான கேப்டனாக ஷான் மசூத்தும் கேப்டனாக செயல்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எனினும், ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் யாரென்று அறிவிக்கப்படவில்லை.

34 வயதான ஷான் மசூத், 2013 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை பாகிஸ்தானுக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 28.52 சராசரியுடன் 1,597 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஏழு அரை சதங்களும் நான்கு சதங்களும் அடக்கம். இதேபோல் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அஃப்ரிடி 52 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல், 27 டெஸ்ட் மற்றும் 53 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் பாபர் அஸம். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “2019-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வழிநடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து (PCB) எனக்கு அழைப்பு வந்த தருணம் தெளிவாக நினைவிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் களத்திலும் சரி, வெளியிலும் சரி பல ஏற்ற, இறக்கங்களை அனுபவித்திருக்கிறேன். கிரிக்கெட் உலகில் பாகிஸ்தானின் பெருமையையும், மரியாதையையும் நிலை நிறுத்த வேண்டும் என்பதை முழுமனதுடன் நோக்கமாக கொண்டிருந்தேன்.

சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தின் கூட்டு முயற்சியால் ஒயிட்பால் ஃபார்மெட் கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் 1 இடத்தை எட்டினேன். எனது இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்து ஆதரவளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றிலிருந்து மூன்று ஃபார்மெட் போட்டிகளிலிருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். இது ஒரு கடினமான முடிவு தான். ஆனால், இந்த முடிவை எடுக்க இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். தொடர்ந்து மூன்று வடிவ போட்டிகளிலும் பாகிஸ்தானுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடுவேன். இந்த முக்கியமான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என பதிவிட்டுள்ளார்.





Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *