புதுடெல்லி: கடந்த 75 ஆண்டுகளாக இந்த நாடாளுமன்றத்தில் (பழைய நாடாளுமன்றம்) இருந்த அனைவரும் இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வந்துள்ளனர். நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு போனாலும், இப்பழைய நாடாளுமன்ற கட்டிடம் வரும் தலைமுறையினருக்கான உத்வேகமாக தொடரும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று (செப்.18) தொடங்கி வரும் வெள்ளி்க்கிழமை (செப்.22) வரை நடக்கிறது. காலை 11 மணிக்கு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக்கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் கலந்து கொள்வது என இண்டியா கூட்டணியினர் தீர்மானத்திருக்கின்றனர். காலையில் தொடங்கிய கூட்டத்தொடரில் சபாநாயகர் ஓம்பிர்லாவின் உரையினைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது உரையினைத் தொடங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: நாம் அனைவரும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்துக்கு விடை கொடுக்க இருக்கிறோம். சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் இந்தியாவின் இம்பீரியல் லெஜிலஸ்லேட்டிவ் கவுன்சிலின் இடமாக இது இருந்தது. சுதந்திரத்துக்கு பின்னர் இது நாடாளுமன்றம் என்ற அடையாளத்தைப் பெற்றது. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முடிவு அந்நிய ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான பணம், கட்டுமானத்துக்கான உழைப்பு நம்முடைய மக்களுடையது என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.
இந்தியர்களின் சாதனைகள் இன்று எல்லா இடங்களிலும் விவாதிக்கப்படுகின்றன. இத 75 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றின் ஒற்றுமைக்கான பலன். சந்திராயன் வெற்றி இந்தியாவை மட்டுமில்லை உலகினையே பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல், நமது விஞ்ஞானிகளின் திறன், 140 கோடி மக்களின் பலம் ஆகியவற்றுடன் இணைந்த ஒரு புதிய இந்தியாவின் வலிமையினை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த தருணத்தில் நமது விஞ்ஞானிகளை நான் மீண்டும் வாழ்த்த விரும்புகிறேன்.
இன்று நீங்கள் ஜி20 உச்ச மாநாட்டின் வெற்றியை ஒருமனதாக பாராட்டியுள்ளீர்கள். நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20 வெற்றி என்பது ஒரு தனிநபரின் வெற்றியோ, ஒரு கட்சியின் வெற்றியோ இல்லை. அது 140 கோடி மக்களின் வெற்றி, நாட்டின் வெற்றி. இது நாம் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய வெற்றி.
ஒரு எம்.பி.யாக நான் இந்த நாளுமன்ற கட்டித்துக்குள் நுழையும் போது, ஜனநாயகக் கோயிலை நான் விழுந்து வணங்கினேன். அது எனக்கு ஒரு உணர்ச்சிப் பூர்வமானத் தருணம். ரயில்வே பிளாட்பாரத்தில் வசித்து வந்த ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவன் எம்.பி., ஆக முடியும் என்று நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை.
மக்களிடமிருந்து இத்தகைய அன்பு கிடைக்கும் என்றும் நான் நினைத்துப்பார்க்கவில்லை. இந்த நாடாளுமன்ற கட்டிடத்துக்கு விடை தருவது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். பல இனிய, கசப்பான நினைவுகள் இதனுடன் இணைந்துள்ளன. நாடாளுமன்றத்தில் நமக்குள் பல கருத்துவேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி நம்மிடம் ஒரு நட்பு இருக்கிறது.
எங்களை விட பத்திரிக்கையாளர்கள் பல இங்கு அதிக நேரம் செலவளித்திருக்கின்றனர். பல பத்திரிக்கையாளர்களுக்கு இந்த கட்டிடத்தை விட்டு செல்வது வருத்தம் அளிக்கும் விஷயமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனாலும் இந்த இடம் பல ஆண்டுகளுக்கு பிறகும் இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக நீடிக்கும். பண்டிட் நேருஜியின் ‘ஸ்ட்ரோக் ஆஃப் மிட் நைட்’, வாஜ்பாயின் ‘அரசங்கங்கள் வரும் போகும், நாடு நிலைத்திருக்க வேண்டும்’ என்ற பேச்சுக்கள் எப்போதும் இங்கு எதிரொலித்துக்கொண்டே இருக்கும். ஆட்சியில் இருக்கும் போதே இறந்த மூன்று பிரதமர்களுமான நேரு, சாஸ்திரி, இந்திராவுக்கு இந்த நாடாளுமன்றம் சிறந்த மரியாதையைச் செலுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
இன்று தொடங்கி இருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய நாடளுமன்ற கட்டித்தில் நடக்கிறது. இரண்டாவது நாளில் இருந்து கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தகுந்தது.