சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அவற்றை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில்,‘‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருக்கிறார். அவற்றுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இதற்கு கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிசந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த வழக்கு கடந்த 10-ம்தேதி விசாரணைக்கு வந்தது.
‘‘அரசியல் சாசன சட்டப்பிரிவு 200-ன்படி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம். அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் மசோதாக்களை கிடப்பில் போட முடியாது’’ என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 20-ம்தேதி நடக்க உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசுநிலுவையில் இருப்பதாக குறிப்பிட்ட பல்கலைக்கழக திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ரவி தற்போது தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
தமிழக அரசு முடிவு: இதைத் தொடர்ந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நாளைகூட்டப்படுகிறது.
.
இதுதொடர்பாக திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் நேற்று சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியதாவது:
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க கோரி அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவிதிருப்பி அனுப்பினார். அதைமீண்டும் நிறைவேற்றி அனுப்பியபோது அனுமதி அளித்தார். நீட்தேர்வுக்கு விலக்கு கேட்டு, 2-வது முறையாக அனுப்பப்பட்ட மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட நாட்களாக முடிவு சொல்லாமல் இருந்த நிலையில், இப்போது, பல மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு, நீதிமன்ற உத்தரவுகூட காரணமாகஇருக்கலாம்.
இந்த மசோதாக்களை மீண்டும்நிறைவேற்ற தமிழக அரசு விரும்புகிறது. அவ்வாறு, திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவைத்தால் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
இதற்காக, சட்டப்பேரவையின் அவசர கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நவ.18-ம்தேதி (நாளை) காலை 10 மணிக்குநடைபெறுகிறது. இதில் ஆளுநர்,நீதிமன்றம், குடியரசுத் தலைவர் பற்றி எதுவும் விவாதிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேரவை செயலர் அறிவிக்கை: பேரவைத் தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் தொடர்பான அறிவிக்கையை பேரவை செயலர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.
‘சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நவ.18-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்’ என்றுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாக்கள் விவரம்: சட்டப்பேரவையில் கடந்த 2020 முதல், கடந்த ஏப்ரல் வரை பல்கலைக்கழகங்கள் தொடர்பான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம்செய்வதற்கான மசோதாக்களும் இதில் அடக்கம்.
பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசேநியமனம் செய்வது மற்றும் முதல்வரே வேந்தராக இருப்பது குறித்த சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதுதவிர, தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவும் நிலுவையில் உள்ளது.
இதுதவிர, முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, பி.வி.ரமணா,சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவுசெய்ய அனுமதி கோரிய கோப்புகள், முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை குறித்த கோப்புகளும் நிலுவையில் உள்ளன. இவற்றில் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.